(செ.தேன்மொழி)

கடற்படையினர் மீதான நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் , கடற்படையை தொடர்பு படுத்தி நாட்டில் பதற்ற நிலைமையை ஏற்படுத்தும் வகையிலான பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ள கடற்படை இவ்வாறான பிரசாங்களை முன்னெடுக்கும் அரசியல்வாதிகளுக்கு தாம் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

முன்னிலை சோசலிஷ கட்சியின் ஊடக சந்திப்பில் கட்சியின் கல்விச் செயற்பாட்டாளர் புபுது ஜயகொடவினால் வெளியிடப்பட்ட கருத்துகள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள கடற்படை , அவரால் குறிப்பிடப்பட்ட விடயங்கள்  உண்மைக்கு புறம்பானவை என்று தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையிலே கூறப்பட்டுள்ளதாவது,

கடற்படையினால் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள சிலாவத்துறை ,முள்ளிகுளம் மற்றும் கஹேவாடிய ஆகிய பகுதிகளில் கடற்படையினர் சுற்றுலா பயணிகளுக்காக ஹோட்டல்கள் நடத்திவருவதாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பானதாகும். இவ்வாறு எந்த ஹோட்டல்களையும் கடற்படையினர் நடாத்தவில்லை.

சிலாவத்துறை மற்றும் முல்லிக்குளம் பகுதியில் ஆரம்ப பதிவாளர்கள் என்று குறிப்பட்டவர்களுக்கு , அரசாங்கத்தினாலும் கடற்படையினராலும் அதே பகுதியில் வேறு காணிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் அடிப்படை வசதிகளும் செய்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு பல குடும்பங்களுக்கு வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

வில்பத்து பகுதியில் முஸ்லிம் மக்களுக்கு வதிவிட வசதிகள் அமைத்துக் கொடுப்பது தொடர்பாகவும் கடற்படையினரை தொடர்பு படுத்தி தெரிவிக்கப்பட்டுள்ள விடயமும் போலியானதாகும். இந்நிலையில் அரசியல்வாதிகள் கடற்படையினரை தொடர் படுத்தி சமூகத்தில் பிரச்சினைகளை தோற்றுவிக்க முயற்சிப்பதையும் , கடற்படையின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான பிரச்சாரங்களும் தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.