புதிதாக உருவாகியுள்ள கோத்தாபயவின் அரசாங்கத்திடம் வடக்கு மாகாண மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும், வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையமும் இணைந்து 21 கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் நேற்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். அவர்கள் தமது கோரிக்கையில் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய 21 முக்கிய பிரச்சினைகளை குறிப்பிட்டுள்ளனர்.

தாம் இதனை மிக விரைவில் கடற்தொழில் அமைச்சரைச் சந்தித்து நேரடியாகக் கையளிக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

வடக்கு மாகாண மீனவர்கள் போர் முடிவடைந்து பல வருடங்கள் ஆகின்ற போதிலும் இன்று வரை பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.அதிலும் குறிப்பாகப் போரால் இடம்பெயர்ந்து வாழும் மீனவ மக்கள் தங்களின் பூர்விக காணிகள் மற்றும் மீன்பிடி இறங்கு துறைகளை முழுமையாக மீளவும் கையளிக்கப்படாமல் உள்ளது.

எனவே அவற்றை விடுவித்து மீனவ மக்கள் தங்கள் தொழிலைச் சுதந்திரமாக மேற்கொள்ள வழிவகை செய்யவேண்டும். 

மேலும் வடக்கில் பெண்களைத் தலைமையாகக் கொண்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பல உள்ளன. குறித்த பெண்கள் மீது விசேட கவனம் செலுத்த வேண்டும்.

எல்லை தாண்டும் மீனவர்களைக் கட்டுப்படுத்துதல், சட்ட விரோத முறைகளைப் பயன்படுத்தி தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நடவடிக்கை எடுத்தல் போன்ற முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ள 21 அம்ச கோரிக்கைகளைப் புதிதாகப் பதவியேற்றுள்ள கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கையளிக்கவுள்ளதாகவும் இவற்றை நிறைவேற்றித் தருமாறு கோரவுள்ளதாகவும் தெரிவித்தனர்.இந்த ஊடக சந்திப்பில் மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் திட்ட இணைப்பாளர் அண்டனி ஜேசுதாசன்,வடக்கு மாகாண கடற்தொழில் இணையத் தலைவர் வீ.சுப்பிரமணியம்,மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்க பிரதிநிதி என்.இன்பம் ஆகியோர் கலந்துகொண்டனர்.