பானைக்குள் தலை சிக்கிக் கொண்டதால் உயிருக்கு போராடிய 3 வயது சிறுவனை,  தீயணைப்பு வீரர்கள் மீட்ட சம்பவம் ஒன்று அண்மையில் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. 

இந்தியாவின் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள பிரவம் பகுதியைச் சேர்ந்தவர் ஆபிரகாம்  அவரின் மனைவி  ஜிஜி  குறித்த தம்பதியினருக்கு, 3 வயது பியான் என்ற ஆண் குழந்தை உள்ளது. 

இந்நிலையில், சிறுவன் பியான் கையில் வைத்திருந்த பானையை தலையில் கவிழ்த்தி விளையாடியபோது, எதிர்பாராத விதமாக பானைக்குள் தலை சிக்கிக் கொண்டது. இதனால் சிறுவன் அழத் தொடங்கினான்.

பெற்றோர் ஓடி வந்தபோது, மகனின் தலையில் பானை சிக்கிக் கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அதை எடுக்க முயன்றனர். ஆனால், பானையின் வாய்ப்பகுதி மிகவும் சிறியதாக இருந்ததால், தலையில் இருந்து பானையை வெளியே எடுக்க முடியவில்லை. நேரம் செல்லச் செல்ல, குழந்தை பயத்தில் கதறி அழத் தொடங்கியது. 

அப்போது, அவ்வழியே சென்ற ஜோஜின் என்பவர், குழந்தையை அருகில் உள்ள தீயணைப்பு துறை அலுவலகத்துக்கு துாக்கிச் சென்றார். தீயணைப்பு வீரர்கள், 'கட்டர்' போன்ற உபகரணங்களை பயன்படுத்தி பானையை வெட்டி, 15 நிமிடங்களில் குழந்தையை மீட்டனர். 

துரிதமாக செயற்பட்டு குழந்தையை மீட்ட தீயணைப்பு துறையினரை, அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.