அனைத்து வகை போட்டிகளுக்கும் விராட் கோலி செயற்பட, சாதாரண வீரராக டோணி தனது ஆட்டத்தை ரசித்து ஆட வாய்ப்பு கொடுக்கலாமென இந்திய அணியின் முன்னாள் இயக்குநரும் சகலதுறை ஆட்டக்காரருமான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய போட்டியிலேயே ரவி சாஸ்திரி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

டோணி கிரிக்கெட்டை அனுபவித்து ஆடும் நேரம் வந்து விட்டது. தலைமைப் பொறுப்பை கோலியிடம் கொடுக்கும் நேரமும் வந்து விட்டது.

நான் தேர்வுக் குழுத் தலைவராக இருந்திருந்தால் இருபதுக்கு - 20, டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான அணிகளுக்கு கோலியையே தலைவராக்கியிருப்பேன்.

இதுகுறித்து சிந்திக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. கோலி அனைத்து வகையான அணிகளுக்கும் தலைவராக நியமிக்கப்பட வேண்டும். 

அடுத்த உலகக்கிண்ண போட்டி 2019 இல்தான் வருகிறது. இந்திய அணிக்கு அதற்கிடையில் பெரிய தொடர்கள் எதுவும் இல்லை. எனவே இதுதான் சரியான நேரமாகும்.

அடுத்த உலகக்கிண்ணத்திற்கு முன்பாக நமக்கு நிறைய காலம் உள்ளதால், கோலியை தலைவராக்கி உலகக் கிண்ணத்திற்கு ஏற்ற வலுவான அணியை கட்டமைக்க இது நமக்கு நல்ல வாய்ப்பாகும்.

டோணி ஒரு வீரராக ஜாலியாக விளையாடட்டும். தனது விளையாட்டை எந்தவிதமான நெருக்கடியும் இல்லாமல் அவர் அனுபவித்து ஆட இது ஒரு நல்லவாய்ப்பு.

டோணி ஒரு அருமையான வீரர். அவரது திறமையை யாரும் பறித்து விட முடியாது. அந்த திறமையான ஆட்டத்தை முழுமையான முறையில் ரசித்துப் பார்க்க அவரிடமிருந்து தலைமைப் பதவியை எடுக்க வேண்டும். அவரும் அப்போதுதான் ரசித்து விளையாட வாய்ப்புக் கிடைக்கும்.

முடிவெடுப்பது கஷ்டம்தான். ஆனால் வேறு வழியில்லை. முடிவெடுக்காவிட்டால் அது சிக்கலில்தான் முடியும். இப்போது முடிவெடுப்பதே சரியானதாக இருக்கும்.

அவுஸ்திரேலியாவில் ஸ்டீவ் வோக் நல்ல ஆட்டத்திறனில் இருந்தபோதுதான் ரிக்கி பொண்டிங் தெரிந்தெடுக்கப்பட்டார். அவருக்கு அடுத்து மைக்கல் கிளார்க் வந்தார். இப்போது ஸ்டீவ் ஸ்மித் இருக்கிறார். 

இதேபோல நமது அணியிலும் அணித் தலைவர் மாற்றம் சீரிய முறையில் இருக்க வேண்டியது அவசியமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.