தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொள்கைகளாலும், தியாகத்தாலும் வளர்த்தெடுக்கப்பட்ட கட்சி. அது சிதறு தேங்காயல்ல. சிதறு தேங்காயை உடைத்துவிடலாம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை யாராலும் உடைக்க முடியாது. இதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

எமது கட்சி அரை நூற்றாண்டை கடந்து  தடம் புரளாது நிலைத்து நிற்கிறது. தமிழ்த் தேசியத்தின் நன்மைக்காக, அதன் எதிர்கால நலனுக்காக அரசோடும், புதிய ஜனாதிபதியோடும் எமது கட்சி பேசும். அது எங்களுக்கு உரித்தானது. அதில் தவறில்லை. அது பற்றி ஊடகங்கள் வாயிலாகவும் தெரிவித்து விட்டோம்.  பட்டமும் பதவியும் எமது கொள்கையல்ல. நாம் அவைகளுக்கு அப்பாற்பட்டவர்கள். கட்சியின் தீர்மானங்களுக்கு அப்பால் எமது கட்சி பற்றாளர்கள் இம்மியேனும் நகரமாட்டார்கள்.

நான் எனது பணிப்பாளர் பதவியை இராஜினாமா  செய்துவிட்டே தேர்தலுக்கு முகம் கொடுத்து பாராளுமன்ற உறுப்பினராகினேன். கிளப்பப்பட்ட பிரதி அமைச்சர் பதவி கதையானது,  எனக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும்  எமது கட்சிக்கும் புதிது. இது ஒரு புரளி. நாம் நல்லதொரு கட்சிப் பற்றாளர்களாகவே இருப்போம் என்பதை எமது மக்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.