வடக்கில் அமைதியான முறையில் மிகவும் உணர்வு பூர்வமாக மாவீரர் தினம் அனுஷ்ட்டிக்கப்பட்ட போதிலும் வடமராட்சியில் இராணுவ காவலரணுக்கு அண்மையில் அனுஷ்ட்டிக்கப்படட நிகழ்வில் இராணுவத்தினர் துப்பாக்கிகளை லோட் செய்து தாம் சுட தயாராக இருப்பதாக மிரட்டியதுடன் புலிக் கொடி வைத்திருக்கின்றோமா என்று கூட எமது கொடிகளை புரட்டிப் பார்த்தனர் என முன்னாள் பாராளுமனற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் அவர் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.இந்த ஆட்சி மாற்றத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாக உள்ளார்.

இவர் ஜனாதிபதியாக வந்து விட்டார் என்பதற்காக தமிழ் மக்கள் எமது இன விடுதலைக்கு போராடி இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர் செல்வங்களை நினைவு கூராது பயந்து ஒதுங்க வேண்டாம்.

நாம் இம்முறை பயந்து ஒதுக்கினால் இனிவரும் காலங்களில் நாம் மாவீரர்களை நினைவு கூர முடியாது எனவே மக்கள் ஒற்றுமையாக துணிந்து அமைதியான முறையில் நாம் உணர்வு பூர்வமாக கடைப்பிடிக்க முன்வரவேண்டும் என அழைப்பு  விடுத்திருந்தேன்.

இந்நிலையில் வடக்கு கிழக்கு தாயகம் எங்கும் மாவீரர் தினம் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

அந்த வகையில் நானும் காலையிலேயே மக்களின் அச்சத்தை போக்க  நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினவுத் தூபியில் அஞ்சலி செலுத்த ஆரம்பித்து யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் பிடியில் உள்ள மூன்று முக்கிய துயிலும் இல்லங்களுக்கு அண்மையில் அஞ்சலி நிகழ்வுகளை நடத்தினேன்.

அதில் கொடிகாமத்தில் இராணுவத்தினர் பல இடைஞ்சல்களை தந்தனர்.மேலும் வடமராட்சி உயிலங்குளத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்திற்கு அண்மையில் நாம் நினைவு தினத்தை முன்னெடுத்த போது எம்மை சுற்றி நின்ற இராணுவத்தினர் தங்களின் துப்பாக்கிகளை லோட் செய்து என்னுடன் நின்றவர்களை அச்சுறுத்தும் பாணியில் செயற்படடனர்.

மேலும் நாம் வைத்திருந்த கொடிகளை சோதனையிடட இராணுவ அதிகாரி புலிக் கொடி வைத்திருக்கின்ரீர்களா என்றும் கூட கேட்டு விசாரணை செய்த்தனர்.இவ்வாறான சில கெடுபிடிகள் அச்ச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தமிழ் மக்கள் ஆகிய நாம் பொறுமையுடனும் உணர்வுபூர்வமாகவும் மாவீரர் தினத்தை அனுசந்தித்துள்ளோம்.என்றார்.