(நா.தனுஜா)

இலங்கையில் தூதரகப் பணிகளைத் தொடர்வதா என சுவிட்ஸர்லாந்து ஆராய்வு

சர்வதேச நாடுகளுடனான இராஜதந்திரத் தொடர்புகள் பாதிக்கப்படும்

இவை இருண்ட யுகத்தை நோக்கிப் பயணிப்பதன் ஆரம்ப அறிகுறிகள்

சுவிட்ஸர்லாந்து தூதரக அதிகாரி கடத்தப்பட்ட விவகாரம் ஏனைய சர்வதேச நாட்டுத் தூதரகங்களின் அவதானத்தையும் பெருமளவில் கிளப்பியிருக்கிறது. இத்தகைய செயற்பாடுகள் சர்வதேச நாடுகளுடனான இலங்கையின் இராஜதந்திரத் தொடர்புகளைப் பாதிப்பதாகவே அமையும். இவையாவும் எமது நாடு மீண்டும் பழைய யுகத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்திருப்பதன் ஆரம்ப அறிகுறிகளாகும் என ஐ.தே. க. வின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஐ.தே. க. வின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், நாடொன்றில் காணப்படும் அரச மற்றும் இராஜதந்திரக் கட்டமைப்புக்களுடன் ஒப்பிடுகையில் சர்வதேச நாடுகளின் தூதரகங்களுக்கென சில பிரத்யேக சட்டங்களும், அந்தஸ்த்தும், சலுகைகளும் காணப்படும். அவ்வாறிருந்தும் கூட இலங்கையிலுள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் அதிகாரி மீது தற்போதைய அரசாங்கம் வன்முறையை பிரயோகித்துள்ளது. 

இவ்வாறு ஒரு தூதரகத்தின் அதிகாரி மீது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஏனைய தூதரகங்கள் அனைத்தினதும் கவனம் இதன்பால் திரும்பியிருப்பதுடன், அவர்கள் வெகு அவதானமாகவும் செயற்பட ஆரம்பித்திருப்பார்கள். அதேவேளை தொடர்ந்தும் இலங்கையில் தமது தூதரக செயற்பாடுகளை நடத்திச்செல்வதா என ஆராயும் நிலைக்கு சுவிட்ஸர்லாந்து தள்ளப்பட்டிருக்கிறது. 

இத்தகைய செயற்பாடுகள் சர்வதேச நாடுகளுடனான இலங்கையின் இராஜதந்திரத் தொடர்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும். 2014 ஆம் ஆண்டிற்கு முன்னர் வரை இலங்கை சர்வதேசத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட நாடாகவே இருந்துவந்தது. எனினும் 2015 இல் நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னரே அந்நிலையை மாற்றியமைத்து சர்வதேசத்துடன் ஒருமித்துச் செயற்பட ஆரம்பித்தோம். அரசியல்வாதிகள் நாட்டைவிட்டு ஓடிய காலம்மாறி, தற்போது அதிகாரிகள் நாட்டைவிட்டுச் செல்ல ஆரம்பித்திருக்கின்றார்கள். 

நாட்டுமக்களுக்கு கடந்தகாலத்தில் அனைத்து விதங்களிலும் நாங்கள் மிதமிஞ்சிய சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்தோம். அப்போது அது எமது பலவீனமாகத் தெரிந்திருக்கலாம். அதன் மதிப்பை உணராமல் இருந்திருக்கலாம். ஆனால் தற்போது மீண்டும் பழைய யுகத்திற்கே செல்வதன் ஆரம்ப அறிகுறிகள் வெளிப்பட ஆரம்பித்திருக்கின்றன. இதற்கு எதிராக பொறுப்புவாய்ந்த எதிர்க்கட்சி என்ற வகையில் தொடர்ந்தும் போராடும் அதேவேளை, இனிவரும் காலங்களில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார் .