மாவீரர்களை நினைவுகூர்ந்து திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று (27) மாலை 6.10 மணியளவில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி அலையும் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வு சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆசா தலைமையில் இடம்பெற்றது.

திருகோணமலையில் வழமையாக சிவன் கோயிலுக்கு அருகில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த இந்த அனுஷ்டானம் இம்முறை அனுஷ்டிக்கப்படவில்லையெனவும், சிவன் கோயிலை சுற்றி இராணுவத்தினர் குவிக்கப்பட்டடிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

இதேவேளை  2015ம் ஆண்டு தொடக்கம் சிவன் கோயிலுக்கு அருகில் இடம்பெற்று வந்த இந்த நினைவு தினம் இம்முறை நடாத்தினால் பாதிப்பு ஏற்படும் என அஞ்சி நடாத்தப்படவில்லையெனவும் தெரியவருகின்றது. 

ஆனாலும் தமிழ் உறவுகளுக்காக தம்மை வித்திட்டவர்களை நினைவு கூற பயந்து இருந்தபோதும் திருகோணமலையில் இவ்வாறான நினைவேந்தலை  செய்ய வேண்டுமெனவும் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி அலையும் சங்கத்தின் தலைவி பயமின்றி முன்னெடுத்ததும் குறிப்பிடத்தக்கது