(ஆர்.யசி)

அரசியல் பலிவாங்களின் கீழ் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கான நீதியை பெற்றுக்கொடுக்கும் வகையில் ஆறு வார காலத்தினுள் ஆணைக்குழு ஒன்றினை நியமித்து அவர்களை விடுதலை செய்ய ஜனாதிபதி அமைச்சரவையில் விசேட அவாதானம் செலுத்தியுள்ளார்.

செய்யாத குற்றங்களில் அரச அதிகாரிகளை கைது செய்யும் முறைமையை தடுக்கும் புதிய சட்ட வரைபுகளும் உருவாக்க அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளது. 

இது குறித்து இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்துக்களை தெரிவித்த அமைச்சரவை இணை ஊடகப்பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன கூறுகையில், 

கடந்த காலங்களில் அதிகளவிலான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் இடம்பெற்றது. அரசியல் பழிவாங்களின் கீழ் அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் இவர்கள் குறித்து ஜனாதிபதி அமைச்சரவையில் விசேட கவனம் செலுத்தியுள்ளார்.

இவர்களுக்கான நியாயங்களை பெற்றுக்கொடுக்கும் வகையில் ஆறு வார காலத்தில் விசாரணை நடத்தும் ஆணைக்குழு ஒன்றினை நியமித்து இவர்களுக்கான நீதியை பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி பணித்துள்ளார். 

அதேபோல் அரச அதிகாரிகளின் மூலமாக நாட்டிற்கு பாரிய சேவையொன்று முன்னெடுக்கப்படுகின்றது. அவ்வாறு இருக்கையில் அரசியல் பழிவாங்களின் கீழ் அரச அதிகாரிகள் கைது செய்யாதிருக்க புதிய சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது என்றார். 

இந்நிலையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் தமிழ் முஸ்லிம் உறுப்பினர்கள் எவரும் நியமிக்கப்படாமை குறித்து ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. எனினும் இந்த நியமனங்கள் எவையும் அமைச்சரவை சார்ந்த விடயமல்ல, இது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் தீர்மானம் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.