(ஆர்.யசி)

இடைக்கால அரசாங்கம் புதிய வரவு செலவு திட்டமொன்றை முன்வைக்காது எனவும் தேவைக்கு அமைய இடைக்கால கணக்கறிக்கை ஒன்றினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து தேர்தலின் பின்னர் முழுமையான வரவு செலவு திட்டமொன்றை முன்வைக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

 அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் கூடிய வேளையில் அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும்  கூறுகையில், 

வரவு செலவு திட்டத்தை விடவும் சிறந்த யோசனை திட்டமொன்றை அமைச்சரவையில் ஜனாதிபதி முன்வைத்து மக்களுக்கு நிவாரணப்பொதி ஒன்றினை முன்வைத்துள்ளார். 

இந்நிலையில் இப்போது வரவு செலவு திட்டம் ஒன்றினை முன்வைக்க எந்த திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை. ஏற்கனவே அடுத்த ஏப்ரல் வரையிலான இடைக்கால கணக்கறிக்கை ஒன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. 

எனினும் எதிர்வரும் மார்ச் மாதம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஏப்ரல் மே மாதங்களில் பொதுத் தேர்தல் ஒன்றினை நடத்த முடியும். அவ்வாறான நிலையில் தேவைப்படின் உரிய காலத்திற்கான  இடைக்கால கணக்கறிக்கை ஒன்றினை மீண்டும் முன்வைக்க முடியும். 

அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் மீண்டும் முழுமையான வரவு செலவு திட்டம் ஒன்றினை முன்வைக்கவே அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக அவர் கூறினார். 

அதேபோல் எமது அரசாங்கம் ஒருபோதும் ஊடக சுதந்திரத்தில் கைவைக்காது. ஊடக சுதந்திரம் இருக்க வேண்டும் என்பதை ஏற்றுகொள்ளும் அரசாங்கம் நாம். அதேபோல் சில நாட்களுக்கு முன்பிருந்து வெளிவரும் ஊடக அடக்குமுறை குறித்த சில சம்ம்பவங்கள் தொடர்பில் அமைச்சரவையில் பேசப்படவில்லை. எனினும் இதன் உண்மைத்தன்மை குறித்து விரைவில் அறியத்தருவோம் என்றார்.