எம்மில் பலரும் தங்களது அலைபேசியில் செய்திகளை தட்டச்சு செய்வதை பார்க்கிறோம். அவர்களில் இளம் வயதினர் சிலருக்கு கட்டைவிரலில் வலி ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக கட்டை விரலின் அடிப்பகுதியில் வலி ஏற்படுகிறது. இதற்கு தற்பொழுது முழுமையான நிவாரணம் தரும் சிகிச்சை அறிமுகமாகி, பலனளித்து வருகிறது.

கட்டை விரலில் வலி ஏற்பட்டால் ஒரு தேநீர்க் கோப்பையை கையிலேந்துவது கடினமாகிவிடும். சிலருக்கு கட்டை விரலின் அடிப்பாகத்தில் வீக்கமும் ஏற்படும். இந்நிலையில் எம்முடைய கைகளின் செயற்பாட்டில் கட்டைவிரலின் பங்களிப்பு அதிகம். கட்டை விரலில் வலி ஏற்பட்டால், அதன் அடிப்பகுதியில் உள்ள சி.எம்.சி. ஜாயிண்ட் எனப்படும் சிறிய மூட்டு பகுதிகளில் ஏற்படும் சிக்கலாகும்.

தொடக்க நிலையில் வலியும், வீக்கமும் ஏற்படும். அதனை உடனடியாக அவதானித்து சிகிச்சை பெறவில்லை என்றால், நாளடைவில் கட்டைவிரலின் முழு செயற்பாடும் பாதிப்படையும். இதனால் உடனடியாக வைத்தியர்களை சந்தித்து சிகிச்சை பெறவேண்டும்.

தற்பொழுது இதற்காக பிரத்யேக உறை ஒன்றினையும், சில பயிற்சிகள் மூலமும் இதற்கு நிவாரணமளித்து வருகிறார்கள். வேறு சிலருக்கு கட்டைவிரலின் வலி அதிகமாகி, அசைக்கவே முடியாத நிலை ஏற்படும் பொழுது, அவர்களுக்கு உடல் பாதிப்புகளை அவதானித்து, அந்தப் பகுதியில் சிறிய அளவிலான சத்திரசிகிச்சை செய்து இந்த பாதிப்பினை சீராக்குகிறார்கள்.