அதிகூடிய பெரும்பான்மை மக்களின் ஆணையைப் பெற்றுள்ள புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவும் தேசிய இனப்பிரச்சினைத் தீர்வுக்கான நடவடிக்கைகளை தற்துணிவுடன் மேற்கொள்ள வேண்டும் என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை அரசியல் வரலாற்றில் தேசிய இனப்பிரச்சினை ஏழு தசாப்தங்கள் கடந்தும் புரையோடிப் போயிருக்கின்றது. விடுதலைக்கான கோரிக்கை அஹிம்சை ரீதியாக முன்வைக்கப்பட்டபோது அதனை தென்னிலங்கை தலைவர்கள் கருத்திற்கொள்ளாமையின் காரணத்தினால் ஆயுதப்போராட்டமாக உருவெடுத்து 2009 வரையில் நீடித்திருந்தது.
போர் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு பத்து ஆண்டுகளாகின்றபோதும் தேசிய இனப்பிரச்சினைக்கான மூலகாரணத்தினை உணர்ந்து தீர்வு காணுவதற்கான இதயசுத்தியான நடவடிக்கைகள் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை.
கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக் ஷவிடத்தில் ஆட்சி அதிகாரங்கள் இருந்த சந்தர்ப்பத்தில் பெரும்பான்மை மக்கள் தமது ஆணையைப் பெருவாரியாக வழங்கியிருந்தபோதும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தினை பூர்த்தி செய்ய முடிந்திருக்கவில்லை. அதேபோன்று தற்போது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவுக்கு பெரும்பான்மை மக்கள் ஆணையை வழங்கியுள்ளனர். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவுக்கு வடக்கு–-கிழக்கு வாழ் தமிழ் மக்கள் வாக்களிக்காது விட்டமைக்கு பலத்தகாரணங்கள் உள்ளன என்பது பகிரங்கமான விடயமாகும் தமிழ் மக்களின் ஜனநாயக தீர்ப்புக்கும் மதிப்பளிக்கவேண்டும்.
ஆகவே தென்னிலங்கைப் பெரும்பான்மை மக்களை ஏற்றுக்கொள்ளச்செய்யும் திராணியுடைய தலைமையைப் பெற்றிருக்கின்ற புதிய ஜனாதிபதி சிங்கள, பௌத்த சித்தாந்தத்துக்குள் கட்டுண்டு நிற்காது தற்துணிவுடன் இந்த நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்கும் செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டும்.
அத்துடன் போர் நிறைவுக்கு வந்தகையோடு 12ஆயிரத்துக்கும் அதிகமான போராளிகளை புனர்வாழ்வுக்கு உட்படுத்தி விடுவித்த நிலையில் தற்போது தண்டனைக்காலத்தினையும் தாண்டி சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 107வரையிலான தமிழ் அரசியல் கைதிகள் நிபந்தனை இன்றி விடுதலை செய்யப்படவேண்டும்.
அதேபோன்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆயிரம் நாட்கள் கடந்தும் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலைமை தொடர்ந்தும் நீடிக்க முடியாது. அவர்களின் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதையாவது வெளிப்படைத்தன்மையுடன் பொறுப்புக்கூறவேண்டியது அவசியமாகின்றது. இதில் தொடர்ந்தும் தாமதங்களை செய்வது மனிதாபிமானமற்ற நடவடிக்கையாகவே அமையும்.
குறிப்பாக, போருக்கு பின்னர் நடைபெற்ற மூன்று ஜனாதிபதி தேர்தல்களிலும் அதேபோல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட பின் நான்கு பாராளுமன்றத் தேர்தல்களிலும் வடக்கு-–கிழக்கு வாழ் தமிழ் மக்கள் தெளிவான செய்தியை அரசாங்கத்துக்கும் தமிழ்த் தலைமைகளுக்கும் வழங்கியிருந்தார்கள்.
இருப்பினும் தமிழ் தலைவர்கள் எமக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை இராஜதந்திரரீதியாக பயன்படுத்துவதற்கு பதிலாக அவற்றை சுயலாப கட்சி அரசியலுக்காகவும் சலுகைகளுக்காகவுமே பயன்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக தமிழ் மக்கள் அடுத்தகட்டம் என்ன செய்வதென்றறியாது தடுமாறும் ஒரு சூழலுக்குள் தள்ளி விடப்பட்டிருக்கின்றார்கள்.
ஆகவே தமிழ் மக்களின் ஆணையைப் பெற்று அவர்களை நிர்க்கதியாக்கிய தமிழ்த் தலைமைகளுக்குரிய பாடத்தினை தமிழ் மக்கள் அடுத்து வரும் காலத்தில் வழங்கு வார்கள் என்று எதிர்பார்ப்பதோடு தமிழ் மக்களின் நிலைப்பாடுகளை உண்மையாக பிரதிபலிக்கும் மாற்றுத்தலைமையும் விரை வில் உருவெடுக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM