(எம்.மனோசித்ரா)

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் தொடர்ந்தும் எதிரணியிலேயே செயற்படும் என்று கூறியிருக்கும் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் , அரசாங்கம் எடுக்கின்ற தீர்மானங்களில் எதிர்க்க வேண்டியவற்றை கூட்டமைப்பு உறுதியாக எதிர்க்கும் அதே வேளை, மக்களுக்கு நன்மைகளை தரும் தீர்மானங்களை ஆதரிக்கும்  என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ பதவியை சஜித் பிரேமதாசவுக்கு வழங்குமாறு தான் கூறியதாக வெளியாகிய செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்றும், இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் தமது நிலைப்பாட்டை தெரிவிக்க பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

திருகோணமலையில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்தப்பில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது :

அரசாங்கத்துக்கு ஆதரவு

நாம் தொடர்ந்தும் எதிர்க்கட்சியிலேயே அங்கம் வகிப்போம். அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அனைத்து சந்தர்ப்பங்களிலும் எதிர்ப்பு தெரிவிப்போம். அதற்காக எல்லா சந்தர்ப்பங்களிலும் அரசாங்கத்துக்கு எதிராகவே செயற்படுவோம் என்று அர்த்தமல்ல.

அரசாங்கத்தால் எடுக்கப்படும் தீர்மானங்களில் நாட்டுக்கு நன்மை பயக்கும் தீர்மானங்கள் காணப்பட்டால் அதற்கு ஆதரவளிப்போம். மக்களுக்கு நன்மை கிடைக்கும் தீர்மானங்களுக்கு நாம் தடையாக இருக்கப் போவதில்லை.

சபாநாயகர் விவகாரம்

பாராளுமன்றத்தில் சபாநாயகர் விவகாரம் குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. எனினும் தற்போது பாராளுமன்றத்தில் சபாநாயகர் ஒருவர் இருக்கிறார். பாராளுமன்றத்தில் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு வாக்களிக்கும் போது நாம் சிந்தித்து செயற்படுவோம்.

சஜித் விவகாரம்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ பதவியை சஜித் பிரேமதாசவுக்கு வழங்குமாறு அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நான் கோரியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அது உண்மைக்கு புறம்பான செய்தியாகும். நான் எந்த சந்தர்ப்பத்திலும் அவ்வாறு கூறவில்லை.

இது முழுமையாக ஐக்கிய தேசிய கட்சியுடன் மாத்திரம் சம்பந்தப்பட்ட விடயமாகும். எனவே அவர்களுக்குள் பேசியே இதற்கான தீர்வு காணப்பட வேண்டும். எனினும் எதிர்காலத்தில் இது தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டால் அதன் போது எமது நிலைப்பாட்டை கூற பின்வாங்கப் போவதில்லை.