(ஆர்.யசி)

பொறுப்புக்கூறல் விடயத்தில்முன்னைய அரசாங்கம் கையாண்ட முன்னேற்றகரமான  நகர்வுகளை மீண்டும் பின்னோக்கி கொண்டுசெல்வது அரசாங்கத்திற்கு ஆரோக்கியமான விடயமல்ல. அரசாங்கமாக முன்வந்து எடுத்துக்கொண்ட பொறுப்பை மாற்றியமைக்க புதிய அரசாங்கம்  முயற்சித்தால் இலங்கை அரசாங்கம் பாரிய சவால்களையும் நெருக்கடியையும்  சந்திக்க நேரிடும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கடந்த ஆட்சியில் ஜெனிவா கூட்டத்தொடரில் முன்னெடுக்கப்பட்ட பொறுப்புக்கூறல் நகர்வுகளை புதிய அரசாங்கம் முழுமையாக நீக்கும் என்ற வகையில் இடைக்கால அரசாங்கத்தின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ள நிலையில் இது குறித்து சுமந்திரன் எம்.பி கருத்து தெரிவிக்கும் போதே இவற்றை கூறினார்.

அவர் மேலும்  குறிப்பிடுகையில்

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்திற்கு பின்னர் யுத்த குற்றங்கள் குறித்த பொறுப்புக்கூறல் விடயங்களில் அப்போதைய இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட நேரத்திலும் அரசங்கம் இது குறித்து ஆராய்வதாகவும் பொறுப்புக்கூறல்களை முன்னெடுப்பதாகவும் வாக்குறுதிகளை வழங்கியிருந்தது.  இந்த விடயத்தில் அரசாங்கத்தின் தொடர்ச்சியான பின்னடைவுகளே சர்வதேசத்தின் அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையில் அமைந்தது.

எனினும் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் அப்போதைய அரசாங்கம் இந்த விடயத்தில் சில ஆரோக்கியமான நகர்வுகளை முன்னெடுத்ததுர்.  30/1 பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கிய நிலையில் இலங்கைக்கு சாதகமான வகையில் சூழ்நிலை  அமைந்தது. முன்னைய அரசாங்கம் சில வேலைத்திட்டங்களை முன்னெடுத்ததன் மூலமாக சர்வதேசத்தின் இருக்குப்பிடியில் இருந்து விடுபட்டு வாக்குறுதிகளை நிறைவேற்றி சர்வதேசத்துடன் இணைந்து பயணிக்கக்கூடிய நிலைமைகள் உருவாகின.  

இந்நிலையில் புதிய அரசாங்கம் மீண்டும் தமது கடும்போக்குத்தன்மைகளை வெளிக்காட்ட ஆரம்பித்துள்ளது. முன்னேற்றகரமான வகையில் முன்னெடுக்கப்பட்ட பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை இடை  நடுவே தடுக்கும் விதத்திலான செயற்பாடுகள் குறித்து இப்போது அரசாங்கம் பேச ஆரம்பித்துள்ளது. இது முன்னேற்றகரமான வகையில் நகர்ந்த விடயங்களை மீண்டும் பின்னோக்கி கொண்டுசெல்லும் நகர்வுகளாகவே நாம் கருதுகின்றோம். அரசாங்கமாக முன்வந்து எடுத்துக்கொண்ட பொறுப்பை மாற்றியமைக்க அரசாங்கம் மீண்டும் முயற்சித்தால் இலங்கை அரசாங்கம் பாரிய சவால்களை சந்திக்க நேரிடும். சர்வதேசத்தின் எதிர்ப்புகள் இலங்கை நோக்கிப்பாயும். இதனை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்  என்றார்.