மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடைமழையால்  இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.  

சீரற்ற காலநிலை காரணமாக சில போக்குவரத்து வீதிகளிலும் மழை நீர் ஊடறுத்துப் பாய்வதனால் பிரயாணிகள் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இதனைவிட மாவட்டத்திலுள்ள தாழ் நிலங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

படுவாங்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள வெல்லாவெளி, கோவில்போரதீவு, பொறுகாமம், மற்றும் பழுகாமம், போன்ற இடங்களிலுள்ள குளங்கள் நிரம்பியுள்ள இந்நிலையில் உறுகாமம், உன்னிச்சை, நவகிரி, மற்றும் கடுக்காமுனைக்குளம் உள்ளிட்ட பெரிய குளங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் வெல்லாவெளி – மண்டூர் பிரதான வீதி, மண்டூர் - நாவிதன் வெளி பிரதான வீதிகளை ஆகியவற்றை ஊடறுத்து வெள்ளநீர் பாய்வதனால் அப்பகுதியின் போக்குவரத்து இஸ்த்தம்பிதம் அடைந்துள்ளது. 

மாவடிமுன்மாரி வீதியை ஊடறுத்து வெள்ளநீர் பாய்வதனால் அவ்வீதியைப் பயன்படுத்தும், நாற்பதுவட்டை, மாவடி முன்மாரி, உள்ளிட்ட பல கிராம மக்கள் போக்குவரத்து சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.

மண்முனை மேற்கு செயலக பிரிவிற்குட்பட்ட சாமந்தியாறு பாலத்திற்கு முன்  உள்ள வீதி உடைந்து வெள்ள நீர் பாய்ந்து செல்வதனால், அப்பகுதியில் அமைந்துள்ள உப்புக்கும்,  சில்லிக்கொடியாறு,  பன்சேனை போன்ற பகுதிகளுக்கான இவ்வீதி ஊடான  போக்குவரத்து தடைப்பட்டுள்ளன.