இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரனை வடக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆறு புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் கடந்த 21 ஆம் திகதி பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

அதன்படி ஊவா மாகாண ஆளுநராக ராஜா கொல்லுரேவும், மேல் மாகாண ஆளுநராக சீதா அரம்பேபொலவும், வடமேல் மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம்.முஸம்மிலும், மத்திய மாகாண ஆளுநராக லலித் யு.கமகேயும், தென் மாகாண ஆளுநராக வில்லி கமகேயும், சபரகமுவ மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகடுவவும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

இதேவேளை வடமாகாணத்துக்கான ஆளுநர் நியமனத்தில் ஏற்பட்டிருக்கும் தாமதம் காரணமாக ஏனைய இரண்டு மாகாண ஆளுநர்களும் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

இந் நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் வட மாகாணத்துக்கான ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு மாகாண ஆளுநர் பதவியை ஏற்குமாறு முரளிதரனுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்ததாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

இதேவேளை கிழக்கு மாகாண ஆளுராக அனுராதா யஹம்பத்தவும், வட மத்திய ஆளுநராக திஸ்ஸ விதாரணவும் நியமிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அனுராத யஹம்பத் தேசியவாத தொழில்முனைவோர் சங்கத்தின் தலைவராகவும் புகழ்பெற்ற ஆடை ஏற்றுமதி நிறுவனத்தின் இயக்குநராகவும் உள்ளார். 

பேராசிரியர் திஸ்ஸா விதாரண முன்னாள் அமைச்சரும், லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார்.