முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர்  தின நிகழ்வுக்கான வேலைகள் நேற்று காலை 10 மணியில்  இருந்து நடைபெற்று வந்தது. நேற்று இரவு 9.30 மணியளவில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் இருந்து பொலிஸார் குறித்த   இடத்துக்கு சென்று  உடன் அனைத்து வேலைகளையும் நிறுத்துமாறு  இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர்  பீற்றர் இளஞ்செழியனிடம் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

அதன் பின்பு இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர்  பீற்றர் இளஞ்செழியன்  அங்கு சென்றிருந்த  பொலிஸாரிடம்  மாவீரர் தின  நிகழ்வானது தொடர்ந்து 5 ஆவது வருடம் இங்கு நடைபெறுவதற்கு  ஏற்பாடு நடைபெறுவதாகவும் கடந்த 4 வருடங்களாக நாம் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்காது மாவீரர் தின நிகழ்வு நடைபெற்றதாகவும் தொடர்ந்து இம்முறையும் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்காது மாவீரர் தின நிகழ்வு நடைபெறும் எனவும்  பொலிஸாரிடம் எடுத்துரைத்தார். 

தொடந்து பொலிஸார் இங்கு வித்துடல்கள் புதைக்கப்பட்டதா?  இல்லை ஆகவே குறித்த இடத்தில் மாவீரர் நாள் நிகழ்வு நடத்த கூடாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  தொடந்தும் பல கேள்விகளை தொடுத்துள்ளனர். 

பொலிஸாரின் கேள்விகளுக்கு பீட்டர் இளஞ்செழியன் தனக்கு அறிவு எட்டிய காலத்தில் இருந்து கடலில் காவியமாகிய அனைவருக்கும் இவ்விடத்திலே மாவீரர் தின நிகழ்வு நடை பெறுவதாகவும்.  வித்துடல்களை விதைத்த இடத்தில் அதற்கு மேல் இராணுவம் இருந்தால் எம் மாவீரர்களுக்கு எங்கு அஞ்சலி செலுத்துவது என்றும் வினாவை எழுப்பியுள்ளார்.   

 அதன் பின்பும் மாவீரர் தின நிகழ்வை தடை செய்யவே பொலிஸார் திட்டம் தீட்டி கொண்டிருந்தனர்.  அதை உணர்ந்த பீற்றர் இளஞ்செழியன் உடனடியாக பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

உடனடியாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் முல்லைத்தீவு பொலிஸ் நிலைய தலைமை அதிகாரியுடன் (HQ)  தொடர்பு கொண்டுள்ளார். அதன் பின்பு தொடர்ந்து மாவீரர் தின நிகழ்வை தடை இன்றி நடத்த அனுமதி கிடைத்ததாக பீற்றர் இளஞ்செழியன்  எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துரைத்த பீற்றர் இளஞ்செழியன் கடந்த 4 வருடங்களாக எந்த தடையும் இன்றி மாவீரர் தின நிகழ்வு நடைபெற்று வந்தது. அதை பொலிஸா ரும் அறிந்திருந்தனர். நேற்று  காலை 10 மணியில் இருந்து நடைபெற்று வரும் மாவீரர் தின முன்னாயத்தங்கள் இரவு 9.30 மணிக்கு தான் முல்லைத்தீவு நகரில் உள்ள பொலிஸாரின் கண்களுக்கு  தெரிந்ததா என கேள்வி எழுப்பியுள்ளார். 

இதற்கு பின்னால்  ஏதோ ஒரு சூழ்ச்சி இருப்பதாகவும் எந்த சூழ்ச்சியும் எந்த தடையும் தொடர்ந்து  வந்தாலும்  மாவீரர் தின நிகழ்வு நடை பெறும் என பீற்றர் இளஞ்செழியன் தெரிவித்தார்.