அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் மாவீரர் தின ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தையண்டியதாக நிகழ்வு ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.

ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லமானது இராணுவமுகாமாகக் காணப்படுவதால் பிறிதொரு தனியாருக்குச் சொந்தமான இடத்தில் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வந்த நிலையில் பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் பொலிஸாரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது. அச்சுறுத்தல் காரணமாகத் தனியாருக்குச் சொந்தமான குறித்த இடம் கைவிடப்பட்டு ஈச்சங்குளத்தில் பிறிதொரு இடத்தில் நினைவு தின நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நேற்று மாலை இடம்பெற்றன.

இதன்போது அங்குச் சென்ற இராணுவத்தினர், பொலிஸார், புலனாய்வாளர்கள் ஏற்பாடுகளை மேற்கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் கட்சி உறுப்பினர்களை விசாரணை செய்ததுடன், அங்கு நின்ற வாகனங்கள் தொடர்பான தகவல்களையும் திரட்டினர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணிநேரம் பதற்ற நிலை ஏற்பட்டது.

தொடர்ந்தும் நினைவு தினத்தை அமைதியாகக் கடைப்பிடிப்போம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்ததையடுத்து  தமது உயர்மட்டங்களைத் தொடர்பு கொண்ட ஈச்சங்குளம் இராணுவ முகாம் பொறுப்பதிகாரியும், ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் அமைதியாக உயிரிழந்தவர்களை நினைவு கூரத் தாம் தடையில்லை எனத் தெரிவித்து, சில கட்டுப்பாடுகளை விதித்து விட்டு அங்கிருந்து சென்றனர்.

இதேவேளை, ஈச்சங்குளம் பிரதான வீதியில் இராணுவ வீதி சோதனை சாவடி ஒன்று நேற்று அமைக்கப்பட்டுள்ளதுடன் வீதிகளில் இராணுவமும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.