ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் நகரங்களை தூய்மைப்படுத்தும் செயற்திட்டத்துடன் இணைந்த விசேட வேலைத்திட்டமொன்று இன்று (26) யாழ் நகரில் முன்னெடுக்கப்பட்டது.

நாட்டின் சகல நகரங்களையும் அழகுபடுத்தும் வேலைத்திட்டம் ஜனாதிபதியின் பதவி ஏற்பினைத் தொடர்ந்து அவரது வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய பெரும்பாலான நகரங்களின் வீதிகள் சுத்தப்படுத்தப்பட்டு வருவதை அவதானிக்கக்கூடியதாக இருப்பதுடன், இதற்கு மக்களின் ஒத்துழைப்பும் பெருமளவில் கிடைக்கப்பெற்றிருக்கின்றமை விசேட அம்சமாகும்.

பொலிஸ் சுற்றாடல் பாதுகாப்புப் பிரிவின் நேரடி கண்காணிப்பில் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நகர சபை ஊழியர்களின் பங்களிப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தில் யாழ் நகர பிதா இம்மானுவேல் அர்னோல்ட், நகர ஆணையாளர் ஜெயசீலன் மற்றும் பிரதேசவாசிகள் பெருந்திரளானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரான யாழ் நகர பிதா இம்மானுவேல் அர்னோல்ட் இந்த வேலைத்திட்டத்துடன் இணைந்து செயற்படுவதோடு, தொடர்ச்சியான அர்ப்பணிப்புடன் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

இவ்வாறு சுத்தம் செய்யப்படும் சுற்றாடலை பாதுகாப்பதும் அதனை தூய்மையாக பேண வேண்டியதும் பொது மக்களாகிய எம்மனைவரதும் பொறுப்பாகுமென்பதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.