(செ.தேன்மொழி)

தமது அரசியல் இலாபத்துக்காக இனபேதத்தை ஏற்படுத்தும் வகையில் வடக்கு கிழக்கு மற்றும் பெருந்தோட்ட பகுதிகளில் பிரசாரங்களை முன்னெடுத்த சிறுபான்மை அரசியல் வாதிகளுக்கு தெற்கில் உள்ள மக்கள் சரியான பதிலடியை கொடுத்துள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேகுணவர்தன எதிர்வரும் பொது தேர்தலின் போது சிறுபான்மையின மக்களை தம்முடன் இணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

பத்தரமுல்ல - நெலும்மாவத்தையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

நாங்கள் தெரிவித்ததை போன்றே 16 தேர்தல் மாவட்டங்களிலும் பெரும்பான்மை வாக்குகளை பெற்று வெற்றிப்பெற்றுள்ளோம். ஐக்கிய தேசிய கட்சியினர்  வடக்கு கிழக்கு வாக்குகளை எம்மால் பெறமுடியாது என்றும், அங்கு அவர்கள் பெருபான்மையை பெற்று விட்டால் ஏனையபகுதிகளில் கிடைக்கும் வாக்குகளை கொண்டு வெற்றி பெறமுடியும் என்றுமே எண்ணியிருந்தனர்.

ஆனால் பெரும்பான்மை மக்கள் அவர்களுக்கு சிறந்த பதிலடியை கொடுத்துள்ளனர்.

சிறுபான்மை இனவாத அரசியல் தலைவர்களின் பிரசாரங்களுக்கு தெற்கில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை மக்கள் இனிவரும் காலங்களில் இனவாதிகளுடன் இணைந்திருக்காமல் எம்முடன் இணைந்து செயற்படுங்கள் என்று நாங்கள் அவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

பொது தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு ஐ.தே.க வினர் எமக்கு ஒத்துழைப்பு வழங்காமல் உள்ளனர். மக்களின் தீர்மானத்திற்கு இணங்கி விரைவில் தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பத்தை ஐ.தே.க எமக்கு வழங்க வேண்டும்.

ஐ.தே.க. வின் பின்வரிசை உறுப்பினர்கள் தங்களின் ஓய்வூதியத்தை மனதிற் கொண்டு செயற்படுகின்றார்கள்.அத்துடன் எமது மூன்றுமாத கால ஆட்சியில் ஏதாவது தவறு இடம்பெறுமா என்று எதிர்பார்த்திருக்கும் அவர்கள் அதன் மூலம் பயனடைவதற்கு கனவுகாண்கின்றார்கள். 

அதனால்தான் இவர்கள் பாராளுமன்ற தேர்தலுக்கு இணக்கம் தெரிவிக்காமல் இருக்கின்றார்கள்.

தற்போது எதிர்கட்சி தலைவர் யார் என்பதிலும் ஐ.தே.க. வில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எம்மை பொறுத்தவரையில் பாராளுமன்றத்தில் யாருக்கு பெரும்பான்மை ஆதரவு இருக்கின்றதோ அவரே எதிர்கட்சி தலைவராக செயற்பட வேண்டும். 

அவ்வாறு பார்க்கின்ற போது ரணில் விக்கிரம சிங்கவிற்கே பெரும்பான்மையான ஆதுரவு இருக்கின்றது. அவரே எதிர்கட்சித் தலைவராக இருக்கமுடியும். எங்கள் விருப்பமும் அதுவே என அவர் தெரிவித்தார்.