நேர்மையாக மக்களுக்குப் பணியாற்றும் அதிகாரிகளால் தெரியாமல் தவறேதும் நிகழ்ந்தால், அவர்களைக் காப்பாற்ற ஒரு போதும் பின்நிற்கமாட்டேன் என்று, கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு  மற்றும் சுற்றுலா, சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

    சுற்றுநிருப சட்டதிட்டங்களைக் காட்டி தன்னுடைய கடமைகளைச் செய்யத் தவறும் அதிகாரிகள் தொடர்பாக, கடும் அவதானம் செலுத்தவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

   முதலீட்டு ஊக்குவிப்பு  அமைச்சில்,  அமைச்சர் பிரசன்ன ரணதுங்க  தனது கடமைகளைப் பொறுப்பெடுத்த பின்னர் அதிகாரிகளைச் சந்தித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

   அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

நாளை முதல் எமது நிறுவனங்களை தனித் தனியாக அழைத்து உங்களுக்கு அறிமுகம் செய்ய எதிர்பார்க்கின்றேன். இன்று நிறுவனங்களை வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்த பின்னர் நாம் நடவடிக்கைகளை ஆரம்பிப்போம். 

   செயலாளர் கொடிகார எனது திட்டங்கள் பற்றி நன்கறிவார். நான் அதிகாரிகளை நன்கு பாதுகாப்பவன். ஆனால், சுற்றுநிருப சட்டங்களைக் காட்டி தங்களுடைய கடமைகளைப் புறக்கணிப்பவர்களுடன் வேலை செய்வது சிரமமாகும். 

   ஆனால், நேர்மையாகக் கடமை செய்யும் போது தவறுகள் நேர்ந்தால் அவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன். எனக்குத்தேவை,  பிரச்சினைகளைக் கொண்டு வருபவர்கள் அல்ல.  அவற்றோடு பதிலையும் கொண்டுவரும் அதிகாரிகளை நான் அதிகம் விரும்புகின்றேன். 

   எனக்கு நல்ல முடிவுகளே தேவை. நல்ல முடிவுகளைப் பெறும் பொறுப்பு உங்களிடமே உள்ளது. நீங்கள் இந்த அமைச்சில் நீண்ட காலம் சேவை புரிந்து நல்ல அனுபவம் பெற்றவர்கள். அவற்றைப் பயன்படுத்துங்கள். ஒரு இலக்கைப் பெற்றுக்கொடுத்தால், அவ்விலக்கை அடைய வேகமாகச் செயற்பட வேண்டும். 

   ஜனாதிபதி, பிரதமர் பெற்றுக் கொடுத்துள்ள இலக்கை நோக்கி இந்த அமைச்சைக் கொண்டு செல்லும் பொறுப்பு உங்களுக்கும் எனக்கும் உண்டு. இந்த நான்கு மாதங்களுக்குள் நிறைய வேலைகளைச் செய்துகாட்ட வேண்டும். 

    பெப்ரவரி மாத இறுதியில் பாராளுமன்றம் கலைக்கப்படும். அதன் பின்னர் உருவாகும் எமது அரசாங்கத்துக்கு இந்த அமைச்சின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க ஆரம்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். 

   சுற்றுலாத் துறையும் முதலீட்டுத் துறையும் எமக்கு பெரும் சவாலாகும். தற்போது இருக்கும் இடத்தை விட உயர்ந்த இடத்துக்குக் கொண்டுவரவே நாம் விரும்புகின்றோம். நல்லவற்றைத் தொடர்ந்து முன்னெடுக்கலாம். ஏனையவற்றை நாம் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.