கொரிலா இருந்த தண்ணீர்; தொட்டி ஒன்றுக்குள் சிறுவன் ஒருவன் தவறி விழுந்ததையடுத்து குறித்த சிறுவனை காப்பாற்றுவதற்காக கொரில்லாவை பாதுகாவலர்கள் சுட்டு கொன்ற சம்பவம் தொடர்பில் சிறுவனின் பெற்றோர்களுக்கு வழக்கு தொடர போவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின்  சின்சினாட்டில்   விலங்கியல் பூங்கா ஒன்று உள்ளது. 

குறித்தப் பூங்காவில் கொரிலாக்கள் இருந்த தண்ணீர் தொட்டி ஒன்றுக்குள்    4 வயது சிறுவன் ஒருவன் தவறி விழுந்துள்ளான்.

இதன்போது, அங்கிருந்த 17 வயதுடைய 'ஹரம்பே' எனப்பெயரிடப்பட்ட ஆப்பரிக்க கொரில்லா ஒன்று சிறுவனை தூக்கிச் சென்றதோடு சுமார் 10 நிமிடங்கள் அங்கும் இங்குமான இழுத்துச் சென்றது.

இதனை கண்ட பாதுகாவலர்கள் குழந்தையை காப்பாற்றும் நோக்கில் கொரில்லாவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று குழந்தையை பாதுகாப்பாக மீட்டனர்.

கொரில்லா இறப்பதற்கு ஒரு நாள் முன்னரே தனது 17ஆவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளது.

 கொரில்லாவை மயக்க ஊசி போட்டு குழந்தையை காப்பாற்றுவதற்கு பதிலாக சுட்டு கொலை செய்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஓஹியோ பொலீசார் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ‘பெற்றோரின் கவனயீனம் காரணமாகவே  குழந்தை தவறி கொரில்லா அருகில் விழுந்துள்ளது.

குழந்தை கொரில்லா கையில் கிடைத்தவுடன் வேறுவழியின்றி அதனை சுட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, பெற்றோரின் அலட்சத்தியத்தால் ஏற்பட்ட இந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் மீது வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.