ரணில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை சஜித்திற்கு வழங்க வேண்டும் - இராதாகிருஷ்ணன்

26 Nov, 2019 | 02:50 PM
image

ஜனநாயகத்தை மதிக்கின்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மக்களின் ஜனநாயக தீர்ப்புக்கு மதிப்பளித்து எதிர்கால ஐக்கிய தேசிய கட்சியின் நன்மை கருதி ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பதவியையும் எதிர்கட்சி தலைவர் பதவியையும் சஜித் பிரேமதாசவிற்கு வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், முன்னாள் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஹட்டனில் 26.11.2019 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்ததன் பின்பு ஐக்கிய தேசிய கட்சிக்குள் பல்வேறு குளறுபடிகள் காணப்படுவதை நாங்கள் அறிகின்றோம்.

இதற்கு ஒரே காரணமாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருப்பதே தெரிகின்றது. எனவே அவர் கடந்த பல வருடங்களாக பல்வேறு அர்ப்பணிப்புகளை செய்து பல விட்டுக்கொடுப்புகளுக்கு மத்தியில் கட்டி காத்து வந்த ஐக்கிய தேசிய கட்சியை பிளவுப்படுவதற்கு சந்தர்ப்பம் அளிக்க கூடாது.

கட்சியின் எதிர்கால நலன் கருதி கட்சியை ஒன்றிணைத்து அதனை முன்னெடுப்பதற்கு சஜித் பிரேமதாசவிற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்து திடமான எதிர்கட்சி தலைவராகவும் செயல்படுவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

தமிழ் முற்போக்கு கூட்டணியை பொருத்தவரையில் நாங்கள் கடந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்பட்டது போல எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியினுடனே இணைந்து செயற்பட தீர்மானித்திருக்கோம்.

அந்தவகையில் நாங்கள் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளுடன் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியை வெற்றியடைய செய்வதற்கு முழுமையாக பாடுப்படுவோம்.

எங்களை பொருத்தவரையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு 55 இலட்சம் வாக்குகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன.

எனவே அந்த மக்களின் நலன் கருதி செயற்பட வேண்டும். அதற்காக சஜித் பிரேமதாச முழுமையாக செயற்படுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.

வெறுமனே அரசாங்கத்தின் எல்லா விடயங்களையும் விமர்சனம் செய்யாது மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கி ஒத்துழைப்பு வழங்க எதிர்கட்சி என்ற வகையில் தயராக இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right