அனர்த்தத்தில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள போதும் மக்களை பார்க்கச் சென்றவர்கள் தமது கட்சி ஆதரவாளர்கள் யாரென்று தேடிச்சென்று உதவிகளை வழங்கியமையும் கட்சி சார்ந்து உதவிகளை வழங்கியதையும் பார்க்க முடிந்தது. நல்லாட்சி அரசாங்கம் தம்மை ஆதரித்த நபர்களுக்கு மட்டுமே உதவிகளை செய்து வருகின்றது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாரளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். 

அரசாங்கம் குறுகிய நோக்கத்தில் செயற்பட்டாலும் நாம் இன மத பேதமின்றி உதவிசெய்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

கொழும்பில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் வேலைத்திட்டத்தில் மஹிந்த ஆதரவு அணியினர் ஈடுபட்டுவரும் நிலையில் நேற்று களனி பிரதேசத்தில் நிவாரண உதவிகளை வழங்கும் நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் கூறுகையில், 

அண்மையில் நாட்டில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தத்தில் மக்கள் பாதிக்கப்பட்டு பாரிய இழப்புகளை எதிர்கொண்டு வந்துள்ளனர். 25 வருடங்களுக்கு பின்னர் நாட்டில் நீண்ட நாட்கள் பாதிப்புகளை ஏற்படுத்திய ஒரு அனர்த்தமாக இது அடையாளப்படுத்தப்படுகிறது. எனினும் இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு   பல்வேறு நபர்கள் உதவினார்கள். அதேபோல் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்கும் பணியில் முப்படையினரும் ஈடுபட்டனர். அதற்கு முப்படைகளுக்கு நன்றிகளை தெரிவித்தே ஆகவேண்டும். அதேபோல் ஏனைய நபர்களுக்கும் நன்றிகளை தெரிவிக்க வேண்டும். 

மக்கள் பாதிக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் மக்களை பார்க்கச் சென்றவர்கள் தமது கட்சி ஆதரவாளர்கள் யாரென்று தேடிச்சென்று உதவிகளை வழங்கியதையும் நாம் கவனித்தோம். அதேபோல் கட்சி சார்ந்து உதவிகளை வழங்கியதையும் நாம் கவந்தித்தோம். இன்று அரசாங்கம் தம்மை ஆதரித்த நபர்களுக்கு மட்டுமே உதவிகளை செய்து வரும்கின்றது. குறுகிய நோக்கத்தில் தான் இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. ஆனால் நாம் அவ்வாறு குறுகிய நோக்கத்தில் எந்த நன்மைகளையும் மக்களுக்கு செய்ததில்லை. இன, மத பேதமின்றி அனைத்து மக்களையும் பாதுகாக்கும் வகையில் எமது செயற்பாடுகளை மேற்கொண்டோம். இப்போது அனைவருக்கும்   உதவிகளை செய்யும் அளவிற்கு எம்மிடம் நிதி இல்லாவிட்டலும் எம்மிடம் உள்ளதைக் கொண்டு மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். 

சகல பகுதி மக்களையும்  சந்தித்து பாதிக்கப்பட்ட சகல பகுதிகளிலும் உதவிகளையும், மாணவர்களின் கல்விக்கான உதவிகளையும், பாதிக்கப்பட்ட நபர்களுக்கான மருத்துவ மற்றும் அடிப்படை உதவிகளை மேற்கொண்டு வருகின்றோம். இன்றும் எம்மை நம்பி உதவிசெய்ய பலர் முன்வருகின்றனர். அவர்களின் மூலமாக மக்களுக்கான உதவிகளை நாம் மேற்கொள்வோம் என்றார்.