கிளிநொச்சி, இரத்தினபுரம் பிரதேசத்தில் வீட்டு கிணற்றொன்றில்  இருந்து எடுக்கப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும் பாவனைக்கு உதவாதவை எனவும் யுத்த காலகட்டத்தில் புதைக்கப்பட்டவை எனவும் இராணுவம் அறிக்கை வழங்கியுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். 

மேலும் பல்வேறு பகுதிகளில் இவ்வாறு ஆயுதங்கள்  இருக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

கிளிநொச்சி, இரத்தினபுரம் பிரதேசத்தில்  உள்ள வீட்டு கிணற்றொன்றில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்ட போது அங்கிருந்து ஒருதொகை ஆயுதங்கள் கிடைக்கப்பெற்ற சம்பவம் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 

அப்பகுதி மக்கள் தகவல் வழங்கியமைக்கு அமையவே இந்த தேடுதல் ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது குறித்த ஆயுதங்கள் தற்போது பயன்படுத்தக்கூடிய நிலையில் இல்லையெனவும் யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளினால் பதுக்கி வைக்கப்பட்டவையாக இருக்கலாம் எனவும் இராணுவம் தமது விசாரணைகளின் மூலமாக எனக்கு அறிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. 

ஆகவே இந்த ஆயுதங்களை எவரும் பயன்படுத்தும் வகையில் இல்லை என்பதும் அண்மைக்காலத்தில் பதுக்கிவைத்த ஒன்றல்ல என்பதும் உறுதியாகியுள்ளது. 

எவ்வாறு இருப்பினும் பொதுமக்கள் தமது தகவல்களை உடனடியாக எம்மிடம் தெரிவிப்பது மக்களுக்கு மிகவும் நன்மையளிக்கும். அந்த அடிப்படையில் இவ்வாறான தகவல்களை தெரிவிப்பதை நாம் வரவேற்கின்றோம். 

மேலும் சமீப காலமாக இவ்வாறான பாவனைக்கு உதவாத ஆயுதங்கள் பல எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. பொதுமக்களின் தகவல்களுக்கு அமைய இவ்வாறான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. எனினும் யுத்த காலகட்டத்தில் பதுக்கப்பட்ட  மேலும் பல ஆயுதங்கள் இவ்வாறு இருக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே மக்கள் அவற்றை கண்டெடுக்கும் பட்சத்தில் உடனடியாக பாதுகாப்பு தரப்பிடம் அறிவிக்க வேண்டும். 

அதேபோல் சட்டவிரோத ஆயுதங்களை பாதுகாப்பு தரப்பிடம் ஒப்படைக்கும் கால எல்லை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்களை பாதுகாப்பு அமைச்சிடம் கையளிக்கும் கால எல்லை மே 30 தொடக்கம் ஜுன் 17ஆம் திகதி வரையில் சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்கும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

சட்டவிரோத ஆயுதங்களை தமது பிரதேசத்தின் அண்மையில் உள்ள பொலிஸ் நிலையம், பிரதேச செயலகம் ஆகிய இடங்களில் ஒப்படைக்க முடியும். இந்தப் பணியையும் மக்கள் பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டும் என்றார்.