மூக்கை நுழைக்கும் பாகிஸ்தான்....!

Published By: J.G.Stephan

25 Nov, 2019 | 04:37 PM
image

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள், பிராந்திய அரசியல், பாதுகாப்பு விவகாரங்களில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தும் ஒன்றாகவே மாறியிருக்கின்றன. பூகோள அரசியல் போட்டிக்கு அப்பால், பிராந்திய அரசியல் போட்டியின் மையமாகவும், இலங்கை மாறி விடக்கூடிய ஆபத்தை இந்த தேர்தல் முடிவு கோடிட்டுக் காட்டியிருக்கிறது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜ பக் ஷ தனது முதலாவது உரையில், சர்வதேச நாடுகளின் விவகாரங்களில் இருந்து இலங்கை ஒதுங்கியே இருக்கும், நடுநிலை வகிக்கும் என்றே குறிப்பிட்டிருந்தாலும், அவ்வாறு ஒதுங்கி, இருந்து விடக்கூடிய சூழல் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

தேர்தல் முடிவு வெளியாகும் வரை, இந்த தேர்தல் அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகளின் கரிசனைக்குரிய ஒன்றாகத் தான் பார்க்கப்பட்டது.

குறிப்பாக, மேற்குலகம் மற்றும் இந்தியா எதிர் சீனா இடையிலான அதிகாரப் போட்டியின்  ஓர் அங்கமாகவே இந்த ஜனாதிபதித் தேர்தல் நோக்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் வெளியாகிய பின்னர், அமெரிக்கா தனக்கென வகுத்துக் கொண்ட எல்லையிலிருந்து பெரிதும் இறங்கி வரத் தயாராக இருப்பது போல காட்டிக் கொள்ளவில்லை.

சீனா தனது அக்கறையையும், நெருக்கத்தையும் வெளிப்படுத்தி யிருந்தாலும், அதற்காக அவசரப்படவில்லை. இந்தியா வழக்கம்போலவே பிராந்தியத்தின் முதல்வனாக – அண்டை நாடாக, எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமோ அவ்வாறு நடந்து கொள்ள முற்பட்டது. இதற்குள் பாகிஸ்தான் ஆச்சரியமூட்டும் எதிர்பாராத நகர்வுகளை முன்னெடுத்திருக்கிறது.

கோத்தாபய ராஜபக் ஷவின் வெற்றியால் பாகிஸ்தான் உற்சாகம் அடைந்திருக்கிறது, இந்தியாவுக்குப் போட்டியாக, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவுக்கு உடனடியாகவே வாழ்த்துக் கூறியது.

அதுபோலேவே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் கோத்தாபய ராஜபக் ஷவுடன் பேசியதை யடுத்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும், கோத்தாபய ராஜபக் ஷவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வது குறித்துப் பேசிய அவர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் போலவே, பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொள்ளுமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.

கோத்தாபய ராஜபக் ஷ ஜனாதிபதியானதும், பாகிஸ்தான், வழக்கத்துக்கு மாறாக இலங்கை விவகாரத்தில் ஆர்வம் காட்டத் தொடங்கியிருப்பதும், நெருக்கத்தை காட்ட ஆரம்பித்திருப்பதும், இந்தியாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

கோத்தாபய ராஜபக் ஷவின் வெற்றியை இந்தியாவுக்கான பின்னடைவு என்றும், பாகிஸ்தானுக்கு நல்லது என்றும், பாகிஸ்தான் ஊடகங்கள் எழுதத் தொடங்கியிருக்கின்றன.

அதிலும், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் மீது பாகிஸ்தான் எந்தளவுக்கு கோபத்துடன் இருந்திருக்கிறது என்பதை இப்போது புரிந்து கொள்ள முடிகிறது.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இந்தியாவின் செல்லப்பிள்ளையாகவே பாகிஸ்தான் பார்க்கிறது.

அண்மையில் இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில், அங்கு இலங்கை அணிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக ரணில் விக்கிரமசிங்கவின் பிரதமர் செயலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட ஒரு தகவல், பாகிஸ்தானுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது,

இதனால் இலங்கை அணி வீரர்கள் ஒவ்வொருவராக பயணத்தில் இருந்து விலக, பாதுகாப்பு குறித்து மீளாய்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதிகபட்ச பாதுகாப்பு அளிப்பதாக பாகிஸ்தான் உறுதியளித்த பின்னரே இலங்கை கிரிக்கெட் அணி அங்கு சென்று விளையாடியது,

இந்த சம்பவத்தின் பின்னால் இந்தியாவே இருந்தது என்று பாகிஸ்தான் அப்போது குற்றம்சாட்டியது. இந்தியாவின் அறிவுறுத்தலுக்கமையவே, ரணில் விக்கிரமசிங்கவின் பிரதமர் செயலகம் அந்த எச்சரிக்கையை விடுத்ததாக பாகிஸ்தான் உறுதியாக நம்புகிறது.

இன்னொரு சம்பவம்,  சார்க் மாநாட்டை பாகிஸ்தானில் நடத்துவதற்கு 2016இல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போது, இந்தியா விலகிக் கொள்ள, கூடவே, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கமும் அந்த முடிவை ஆதரித்திருந்தது.

சார்க் மாநாட்டை இன்று வரை நடத்த முடியாத நிலையில் பாகிஸ்தான் இருக்கிறது.

இதனால் இந்தியாவுக்கு நெருக்கமானவராகவே, ரணில் விக்கிரமசிங்கவை பாகிஸ்தான் பார்த்து வந்தது. இந்த தேர்தலில் கோத்தாபய ராஜபக் ஷவின் வெற்றியை பாகிஸ்தான் எதிர்பார்த்தது.

பாகிஸ்தானிடமிருந்து எட்டு ஜேஎவ்–17 போர் விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கான எல்லா ஏற்பாடுகளும் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், இந்தியாவின் அழுத்தங்களால் இன்று வரை அந்த விமானக் கொள்வனவு சாத்தியப்படவில்லை. இதுவும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் மீது பாகிஸ்தான் கோபம் கொள்வதற்குக் காரணம். இந்திய அரசாங்கத்தினால் சுலபமாக கையாளக் கூடியதாக ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் இருந்தது- பாகிஸ்தானுக்கு எரிச்சலைக் கொடுத்தது.

அதனை மாற்றுகின்ற விதத்தில், கோத்தாபய ராஜபக் ஷவின் அரசாங்கம் இருக்கும் என்று, பாகிஸ்தான் உறுதியாக நம்புகிறது.

சஜித் பிரேமதாஸ  தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால்,  பாகிஸ்தானுக்கு பேரழிவாக அமைந்திருக்கும் என்று தனது பெயரை வெளியிட விரும்பாத பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் பாகிஸ்தான் நாளிதழான Express Tribune இடம் கூறியிருந்தார்.

கோத்தாபய   ராஜபக் ஷ  வெற்றி பெற்றதும் அவருக்கு உடனடியாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக் கூறியிருந்த போதும், உண்மையில் இந்தியாவுக்கு அது துக்கமாகவே இருக்கும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டிருந்தார்.

கடந்த முறை மஹிந்த  ராஜ பக்  ஷ வைத் தோற்கடிப்பதில்  இந்தியாவின் றோ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் செல்வாக்குச் செலுத்தியிருந்த     நிலையில், ராஜ பக் ஷ குடும்பத்துடன்   இந்தியா நல்ல உறவுகளை வைத்திருக்கவில்லை என்றும்  Express Tribune எழுதி யிருந்தது.

கோத்தாபய   ராஜபக் ஷவின்  வெற்றி பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் சாதகமான ஒரு  முன்னேற்றம்   என்று  இலங்கை  விவகாரங்களை கவனிக்கும்   பாகிஸ்தானிய   அதிகாரி  ஒருவரும் கூறியிருக்கிறார். இந்தியா மீது பாகிஸ்தானுக்கு வெறுப்பு, -கோபம் இருப்பது  ஒன்றும் இரகசியமான விடயம் அல்ல. ஆனால், வெளிப்படையாகவே கோத்தாபய ராஜபக் ஷவை பாகிஸ்தான் ஆதரிக்க முனைந்திருப்பதும், தமக்கு சாதகமான நிலை தோன்றியிருப்பதாக காட்டிக்கொள்ள முனைந்திருப்பதும் இந்தியாவை உசுப்பி விட்டிருக்கிறது.

கோத்தாபய ராஜபக் ஷவை வைத்து, பிராந்திய அரசியல், பாதுகாப்பு விவகாரங்களில் காய்களை நகர்த்துவதற்கு பாகிஸ்தான் முற்படுகிறதோ என்ற சந்தேகம் இந்தியாவுக்கு தொற்றியிருக்கிறது.

கோத்தாபய ராஜபக் ஷ பதவியேற்ற மறு நாளே- அவர் கடமைகளை ஏற்றுக் கொண்ட 6 மணித்தியாலங்களுக்குள்ளாகவே, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், கொழும்பு வந்து அவரைச் சந்தித்ததற்குப்  பின்னணியில் வலுவான காரணிகள் இருந்தன.

கோத்தாபய ராஜபக் ஷவை சீனா, பாகிஸ்தான் போன்ற தரப்புகளின் பக்கம் நெருங்க விடாமல், இழுத்துப் பிடிக்கும்  யுக்தியை இந்தியா கையாள முற்பட்டது.

கோத்தாபய ராஜபக் ஷவுக்கும் பாகிஸ்தானுக்கும் நீண்டகால நெருக்கம் இருப்பதையும், ராஜபக் ஷ குடும்பத்துடன், சீனாவுக்கு இருக்கின்ற நெருங்கிய உறவுகளையும் இந்தியா இலகுவாக எடுத்துக் கொள்ளவோ- தட்டிக் கழித்து விடவோ தயாரில்லை.

இது குறித்து  இந்தியாவின்  எக்கொனமிக்  ரைம்ஸ்  நாளிதழில் எழுதப்பட்டிருந்த   கட்டுரை   ஒன்றில்,  1970களின்   தொடக்கத்தில்  இளம் இராணுவ   அதிகாரியாக கோத்தாபய   ராஜபக் ஷ இருந்த போது, பாகிஸ்தானில்    அதிகாரிகள்   பயிற்சியைப்   பெற்றிருந்தார்   என்றும், அப்போது   பாகிஸ்தானுடன்    இலங்கை   நெருங்கிய   உறவுகளை   பேணி வந்தது   என்றும்   சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாதுகாப்புச்   செயலராக   அவர்   இருந்த   போது   புலிகளுக்கு   எதிரான போருக்காக   பாகிஸ்தானின்   இராணுவ   உதவியைப் பெற்றுக் கொண்டதாகவும்  அந்தக் கட்டுரையில்   குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை,   1971இல் இந்திய – பாகிஸ்தான்  போரின்  போது தற்போதைய பங்களாதேஷான,   கிழக்கு  பாகிஸ்தானுக்கு   சென்ற  பாகிஸ்தான் விமானங்களுக்கு   கொழும்பு   வழியாக  பயணம்  மேற்கொள்ள   அப்போதைய அரசாங்கம்   அனுமதித்திருந்தது.

இலங்கை   அரசாங்கம்  தமக்கு  செய்த  மிகப் பெரிய  துரோகமாகவே  இந்தியா அதனைப் பார்த்தது.

அப்போது   பாகிஸ்தான்   விமானங்கள்   174  தடவைகள்   கட்டுநாயக்க   விமான நிலையத்தில்   தரையிறங்கிச் சென்றிருந்தன.  இந்தியா   அதனை   இன்னமும் மறந்து விடத் தயாராக  இல்லை.

1971 போரின் போது  இந்தியாவை   எதிர்த்துக் கொண்டு   பாகிஸ்தான் விமானங்களை   தரையிறங்குவதற்கு     இலங்கை   அனுமதித்ததும் கூட, புலிகளுக்கு   எதிரான   போருக்கு  பாகிஸ்தான்  உதவியதற்கு,  ஒரு  காரணம்.

புலிகளுக்கு   எதிரான   இறுதிக்கட்டப் போரின்  போது, பாகிஸ்தான் இராணுவமும்,  ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பும்   இலங்கைப் படையினருடன்  நெருங்கிய தொடர்பில்  இருந்ததும், ஆயுத தளபாடங்களை   விநியோகித்ததையும் இந்தியா   நினைவில்   வைத்திருக்கிறது.

அதுமாத்திரமன்றி,   2008 ஓகஸ்ட்   மாதம்  விடுதலைப் புலிகளின்   தளங்கள் மீது   நடத்தப்பட்ட   விமான   தாக்குதல்களில்,  பாகிஸ்தான்   விமானிகளும் பங்கெடுத்தனர்   என்று The News of Pakistan  தகவல்   வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

போர்  முடிந்த  பின்னரும்  ஐ.எஸ். ஐ. எஸ் அமைப்பு  இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்கான   தளமாக  கொழும்பை  பயன்படுத்தி  வந்தது.  இதனால் கொழும்புக்கும்   புதுடெல்லிக்கும்   இடையில்   அவ்வப்போது   முறுகலான நிலைமைகளும்   ஏற்பட்டு   வந்தன.

இவ்வாறானதொரு  பின்னணியில், கோத்தாபய ராஜபக் ஷவின் வருகையைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீண்டும் வாலாட்டத் தொடங்கியிருப்பதை  இந்தியா நல்லதொரு சகுனமாக கருதும் போலத் தெரியவில்லை.

அதேவேளை, பாகிஸ்தானும்  புதிய சூழலை தனக்கான வாய்ப்பாக மாற்றிக் கொள்ள முனைகிறது.

இவ்வாறானதொரு பின்புலத்தில், இந்திய- –பாகிஸ்தான் முரண்பாட்டுக்குள் இலங்கை எவ்வாறு சிக்கி மீளப் போகிறது என்ற கேள்வி இருக்கிறது. கோத்தாபய ராஜபக் ஷ சர்வதேச சக்திகளின் முரண்பாடுகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் நடுநிலை வகிக்கப் போவதாக கூறியிருந்தாலும், ஆரம்பக் கட்டமே அதற்குக் சவாலானதாகத் தான் நகருவதாக தோன்றுகிறது.

- கார்வண்ணன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04