ஜனா­தி­பதித் தேர்­தலில் வடக்கு, கிழக்கு மக்கள் மீண்டும் ராஜபக் ஷவினர் மீதான தமது அதி­ருப்­தியை, நம்­பிக்­கை­யீ­னத்தை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்கள்.

2005 ஜனா­தி­பதித் தேர்­தலைப் புறக்­க­ணித்­தி­ருந்த வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள், அதற்குப் பிந்­திய ஜனா­தி­பதித் தேர்­தல்­களில் ஒரு­போதும் ராஜபக் ஷவி­ன­ருக்கு ஆத­ர­வாக வாக்­க­ளிக்­க­வில்லை.

2010, 2015இல் மஹிந்த ராஜபக் ஷவுக்கோ, இந்­த­முறை கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கோ ஆத­ர­வாக வாக்­க­ளிக்­காமல், ஒரு பல­மான செய்­தியை அவர்கள் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்கள்.

அதிலும், கடந்த முறை­களைப் போலன்றி, இந்­த­ முறை கடு­மை­யான சவால்­க­ளுக்கும் மத்­தியில், தமிழ், முஸ்லிம் மக்­களின் வாக்குப் பலத்தை சிதைக்கும் முயற்­சி­களும், முனைப்­பு­களும் தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்த நிலைக்கும் மத்­தியில், உல­கத்­தையே திரும்பிப் பார்க்கும் ஒரு செய்தி-  வடக்கு, கிழக்கு மற்றும் மலை­யக மக்­களால் எடுத்துக் கூறப்­பட்­டுள்­ளது.

இந்த தேர்தல் முடிவு பல­ருக்கு அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது, சில­ருக்கு ஆச்­ச­ரி­யத்தைக் கொடுத்­தி­ருக்­கி­றது,

ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்­ற­வுடன் நிகழ்த்­திய உரையில் கூட, கோத்­தா­பய ராஜபக்ஷ, இதனை பிரஸ்­தா­பித்­தி­ருந்தார்.

தான் சிங்­கள மக்­களால் தெரிவு செய்­யப்­பட்­டி­ருப்­ப­தா­கவும், சிங்­கள பௌத்த வாக்­கு­களால் தெரிவு செய்­யப்­ப­டுவேன் என்று நம்­பி­யி­ருந்த நிலையில், தமிழ், முஸ்­லிம்­களும் அதில் பங்­கா­ளி­க­ளாக வேண்டும் என்று அழைப்பு விடுத்த போதும், அதற்கு உரிய பலன் கிடைக்­க­வில்லை என்றும் அவர் கூறி­யி­ருக்­கிறார்.

இதனை அவர் ஒரு ஏமாற்­ற­மாக குறிப்­பிட்­டாரா- அல்­லது ஒதுங்கி நிற்கும் தமிழ், முஸ்­லிம்­க­ளையும் தம்­முடன் இணைந்து பய­ணிக்க வேண்டும் என்­பதை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­காக குறிப்­பிட்­டாரா என்ற வாதப் பிர­தி­வா­தங்கள் நடந்து கொண்­டி­ருக்­கின்­றன.

தமிழ் மக்கள் இந்த தேர்­தலில் அளித்த வாக்­குகள் யாரும் எதிர்­பா­ரா­தவை. இந்­த­ளவு மக்கள் வாக்­க­ளிக்க முன்­வந்­தது ஒன்று.

பல்­வேறு குழப்பும் முயற்­சி­க­ளுக்கு மத்­தி­யிலும் தெளி­வான தீர்­மா­னத்தை எடுத்­தது இன்­னொன்று.

தமிழர் தரப்பு ஒன்­று­பட்டு தீர்­மானம் எடுக்க வேண்­டு­மென்றும், அது உல­கத்­துக்கு ஒரு செய்­தியை சொல்­வ­தாக இருக்க வேண்டும் என்­பதும் தமிழர் தரப்பில் பெரும் விருப்­பாக இருந்­தது.

இந்த தேர்­தலில் பேரம் பேசும் வாய்ப்பு இல்­லாமல் போன­போது, அந்த இலக்கை முன்­வைத்து, ஐந்து கட்­சி­களின் கூட்டு முடிவு, பொது வேட்­பாளர் உள்­ளிட்ட தெரி­வுகள் ஆரா­யப்­பட்­டன.

ஆனாலும்,  ஐந்து கட்­சி­களின் கூட்டு, ஒரு­மித்த முடிவை எடுக்­காமல் குழம்பிப் போனது. இது இந்த தேர்­தலில் தமிழ் மக்­களின் நிலைப்­பாட்டை கருத்தை வெளிப்­ப­டுத்தும் முயற்­சிக்கு தடை­யாக அமைந்து விடுமோ என்ற கலக்­கத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

ஆனால், தமிழ் மக்கள் அவ்­வா­றான குழப்­பங்­க­ளுக்கு உட்­ப­டாமல் தெளி­வா­ன­தொரு நிலையை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்கள் என்­பதே உண்மை.

தெற்­கி­லுள்ள சிங்­கள பௌத்த மக்கள், கோத்­தா­பய ராஜபக் ஷவை எவ்­வாறு ஒரு­மித்து முடிவு செய்­தார்­களோ, அது­போ­லவே வடக்கு, கிழக்கு, மலை­யக மக்­களும் ஒரு­மித்த கருத்­தையே வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்கள்.

தென் மாகா­ணத்தில் தான் அதி­க­பட்­ச­மாக 65 வீத வாக்­கு­களை கோத்­தா­பய ராஜபக் ஷ பெற்­றி­ருந்தார். ஆனால் சஜித்­துக்கு வடக்கில், 82 வீத வாக்­கு­களும், கிழக்கில் 77 வீத வாக்­கு­களும் கிடைத்­தி­ருந்­தன.

வடக்கு, கிழக்கைப் பொறுத்­த­வ­ரையில், கோத்­தா­பய ராஜபக் ஷ, சஜித் பிரே­ம­தாஸ என்ற வேட்­பா­ளர்­களை ஒதுக்கி விட்டு, மக்­களின் இரு வேறு­பட்ட கருத்­துகள் -– நிலைப்­பாட்­டுக்கே முன்­னு­ரிமை கொடுக்­கப்­பட வேண்டும்.

சஜித் பிரே­ம­தா­ஸவை விரும்பி ஆத­ரிக்க வேண்டும் என்­பதோ, அவர் ஆட்­சிக்கு வந்தால் தமிழ் மக்­க­ளுக்கு, எல்லா பிரச்­சி­னை­க­ளையும் தீர்த்து விடுவார் என்­பதோ தமிழ்ப் பேசும் மக்­களின் நிலைப்­பா­டாக இருக்­க­வில்லை.

சஜித் பிரே­ம­தா­ஸவை ஆத­ரிப்­பதன் மூலம், ராஜபக் ஷ குடும்­பத்­துக்கு எதி­ரான நிலைப்­பாட்டை அவர்கள் வெளிப்­ப­டுத்த முயன்­றார்கள் என்று கூறு­வதில்  தவ­றில்லை.

ராஜபக் ஷ குடும்­பத்­தி­ன­ரி­லேயே, அதி­க­ளவில் சிறு­பான்­மை­யி­னரால், நிரா­க­ரிக்­கப்­பட்­ட­வ­ராக கோத்­தா­பய ராஜபக்  ஷவே இருக்­கிறார் என்­பது இந்த தேர்­தலில் தெளி­வாக உறுதி செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது.

போர் முடிந்த கையுடன், 2010இல் நடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்த ராஜபக் ஷ பெற்­றி­ருந்த வாக்­கு­களை விடவும், அதற்குப் பின்னர், 2015இல், மஹிந்த ராஜபக் ஷ பெற்ற வாக்­கு­களை விடவும், கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு இந்­த­முறை கிடைத்த வாக்­குகள் மிக­மிகக் குறைவு.

யாழ்ப்­பா­ணத்தில், 2005இல், 44,154 வாக்­கு­க­ளையும், 2015இல், 74,454 வாக்­கு­க­ளையும் மஹிந்த ராஜபக் ஷ பெற்­றி­ருந்தார். ஆனால், இந்­த­முறை கோத்­தா­பய ராஜபக் ஷவினால், வெறும் 23,261 வாக்­கு­களைத் தான் பெற முடிந்­தி­ருக்­கி­றது.

வன்­னியில், 2010இல் 28,740 வாக்­கு­க­ளையும், 2015இல், 34,377 வாக்­கு­க­ளையும் மஹிந்த ராஜபக் ஷ பெற்­றி­ருந்தார். ஆனால் கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு கிடைத்­தி­ருப்­பது,  26,105 வாக்­குகள் தான்.

மட்­டக்­க­ளப்பில், 2010இல் 55,663 வாக்­கு­க­ளையும், 2015இல், 41,631 வாக்­கு­க­ளையும், மஹிந்த ராஜபக் ஷ பெற்­றி­ருந்த போதும், கோத்­தா­பய ராஜபக் ஷவினால், 38,460 வாக்­கு­களைத் தான் பெற முடிந்­தி­ருக்­கி­றது.

அதிலும், யாழ்ப்­பாணம், வன்­னியில், 2010இல் கிடைத்த வாக்­கு­களை விட 2015இல் மஹிந்த ராஜபக் ஷவுக்கு கூடுதல் வாக்­குகள் கிடைத்­தன.

அதே­வேளை, மட்­டக்­க­ளப்பில் இந்த மூன்று தேர்­தல்­க­ளிலும், ராஜபக் ஷவி­ன­ருக்கு வாக்­குகள் குறைந்து கொண்டே வந்­தி­ருக்­கின்­றன.

தமிழ் மக்கள் அதி­க­ளவில் வசிக்கும் இந்த மூன்று தேர்தல் மாவட்­டங்­களின் முடி­வு­களில் இருந்தும், அம்­பாறை, திரு­கோ­ண­மலை, நுவ­ரெ­லியா போன்ற மாவட்­டங்­களின் முடி­வு­களில் இருந்தும், ராஜபக் ஷவி­னரின் மீதான வெறுப்போ அல்­லது கோபமோ, நம்­பிக்­கை­யின்­மையோ தமிழ் மக்­க­ளிடம் அதி­க­ரித்து வந்­தி­ருக்­கி­றது என்­பதை உணர முடி­கி­றது.

ஒட்­டு­மொத்த தமிழ்ப் பேசும் மக்­களும் ராஜபக் ஷவினர் மீது ஒரு அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­து­கி­றார்கள் என்றால், அதன் தார்ப்­ப­ரி­யத்தை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ராஜபக் ஷ குடும்பம், இலங்­கையில் நீண்­ட­கா­ல­மாக அர­சியல் செய்து வரு­கி­றது. அடுத்­த­டுத்த தலை­மு­றை­க­ளுக்கும் அதனைக் கடத்திக் கொள்­வ­தற்­கான தயார்­ப­டுத்­தல்­க­ளையும் செய்து கொண்­டி­ருக்­கி­றது.

எனவே, நாட்டின் சனத்­தொ­கையில் கால் பங்­கிற்கும் அதி­க­மான தொகை­யு­டைய சிறு­பான்­மை­யி­ன­ரான தமிழ், முஸ்­லிம்கள் மத்­தியில் அதி­க­ரித்து வரும் வெறுப்­பு­ணர்வை ஒதுக்கித் தள்ளி விட்டு, அவர்­களால் இல­கு­வாக கடந்து செல்ல முடி­யாது.

தமிழ், முஸ்லிம் மக்­க­ளையும் அர­வ­ணைத்துச் செல்­லக்­கூ­டிய அர­சியல் உபாயம் ஒன்று அவர்­க­ளுக்கு நிச்­சயம் தேவைப்­படும்.

எனவே, இந்த தேர்தல் முடி­வு­களை அவர்கள் நன்கு அலசி ஆராய்ந்து, தம்மை சுய­ப­ரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்திக் கொள்­ளவே முற்­ப­டு­வார்கள் என்றே கருத வேண்டும்.

தமிழ், முஸ்­லிம்கள் ஏன் ராஜபக் ஷவி­ன­ரிடம் இருந்து ஒதுங்கிக் கொள்ள முனை­கி­றார்கள் என்ற கேள்­விக்கு, பதில் காண வேண்­டி­யது முக்­கியம்.

தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக தாங்கள் போரை நடத்­த­வில்லை என்று தேர்தல் மேடை­க­ளிலும், ஊட­கங்­க­ளிலும். அவர்கள் கூறி­யதை மக்கள் ஏற்­க­வில்லை. பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ரான அவர்­க­ளுக்குத் தெரியும், போர் யாருக்கு எதி­ராக நடத்­தப்­பட்­டது, யார் அதனால் பாதிக்­கப்­பட்­டனர் என்­பது.

எனவே, தமி­ழர்­களின் மீது போர் தொடுக்­க­வில்லை என்று – தமிழ் மக்­களை மீட்­ப­தற்­கா­கவே போர் நடத்­தப்­பட்­டது என்று செய்­யப்­பட்ட பிர­சா­ரங்கள் தமிழ் மக்­களை வெறுப்­ப­டையச் செய்­தி­ருக்­கி­றது. இது முதல் விடயம்.

போர்க்­கா­லத்தில் நடந்த சம்­ப­வங்­களை ஏற்றுக் கொண்டு, அதற்கு நீதியை வழங்கும் உத்­த­ர­வா­தங்­களை அளிக்­காமல், நடந்­தது நடந்து விட்­டது, இனி எதிர்­கா­லத்தைப் பற்றி பார்க்க வேண்டும் என்று, அலட்­சி­யப்­ப­டுத்திக் கொண்டு செல்ல முயன்­ற­தையும், தமிழ் மக்­களால் ஏற்றுக் கொள்ள முடி­ய­வில்லை.

மஹீந்த ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் தமக்கு ஏற்­பட்ட கசப்­பான அனு­ப­வங்­களை, சம்­ப­வங்­களை அவர்­களால் இன்­னமும் மறக்க முடி­யாமல் இருக்­கி­றது, அத்­த­கைய நிலைக்கு மீண்டும் திரும்பிச் செல்­வ­தற்கு அவர்கள் றிஸ்க் எடுக்க விரும்­ப­வில்லை.

தாம் அனு­ப­வித்த ஜன­நா­யக வெளிக்கு அச்­சு­றுத்தல் வந்து விடக்­கூ­டாது என்ற எச்­ச­ரிக்கை உணர்வு அவர்­க­ளிடம் .இருந்­தது.

அதை­விட, தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் விட­யத்தில் ராஜபக் ஷவினர் கொண்­டி­ருந்த நிலைப்­பாடும் தமிழ் மக்­க­ளுக்கு ஏமாற்­றத்­தையே அளித்­தது.

வாக்­கு­றுதி அளித்­த­படி அதி­கா­ரப்­ப­கிர்வு அல்­லது இனப்­பி­ரச்­சினை தீர்வு விட­யங்­களில் அவர்கள் செயற்­ப­டா­ததும், கோத்­தா­பய ராஜபக் ஷவின் கடும்­போக்கும் அவர்­க­ளுக்கு அச்­சத்தைக் கொடுத்­தி­ருந்­தது.

இந்த விட­யத்தில் ராஜபக் ஷவினர் தேர்தல் காலத்தில் வாக்­கு­று­திகள் பல­வற்றைக் கொடுக்க முனைந்­தனர். எங்­களை நம்­புங்கள், என்று அவர்கள் கூறி­னரே தவிர, தமிழ் மக்கள் நம்­பு­கின்ற அள­வுக்கு அவர்கள் நடந்து கொண்­டி­ருக்­க­வில்லை.

ராஜபக் ஷவினர் தெற்கில் தமது கடந்­த­கால ஆட்­சியை நினை­வு­ப­டுத்தி வாக்கு கேட்­டதை போல, வடக்கில் கேட்க முடி­ய­வில்லை.

தமது ஆட்­சியில் புலி­களை ஒழித்­ததை போல நாட்டின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­துவோம் என்று  தெற்கில் கூறிய அவர்கள், வடக்கில் கடந்த காலத்தை மறந்து விட்டு எதிர்­கா­லத்­துக்கு வாருங்கள் என்று அழைத்­தனர். இது தமிழ் மக்­க­ளுக்கு இரட்டை வேட­மா­கவே தோன்­றி­யது.

தமிழ் மக்­க­ளிடம் போய் எங்­களை நம்­புங்கள் என்று கோரி­னார்­களே தவிர அவர்கள், தமிழ் மக்கள் மீது நம்பிக்கை வைக்க வில்லை.

தேர்தல் பிரசாரங்கள் ஓய்வதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னதாக கிழக்கில் பசில் ராஜபக் ஷ இந்தமுறை கிழக்கை முழுமையாக வெற்றி கொள்ளுவோம் என்று சூளுரைத்தார்.

ஆனால், அடுத்தடுத்த நாள், கொழும்பில் 7 மாகாணங்களில் வெற்றி கிடைக்கும் என்று குறிப்பிட்டார். அதாவது தேர்தல் நடக்க முன்னரே, வடக்கு , கிழக்கில் தங்களுக்கு வெற்றி கிட்டாது என்பது அவர்களுக்கு தெரிந்திருந்தது.

ஏனெனில், தமிழ் மக்களை அவர்கள் நம்பவில்லை. அதே நம்பிக்கையீனம் தமிழ் மக்களுக்கும் இருந்தது, அதுவே இந்த தேர்தலில் வெளிப்பட்டிருக்கிறது.

இதையெல்லாம் சரியாக கணக்கிட்டு தமிழ், முஸ்லிம் மக்களை அரவணைத்துச் செல்லும், அவர்களின் பிரச்சினையை தீர்க்கும் ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக் ஷவும், ராஜபக் ஷ அரசாங்கமும் இருக்கப் போகிறதா அல்லது, பழைய குருடி கதவை திறடி என்ற வகையில், தான் நகரப் போகிறதா ?

- கபில்