வடக்கு கிழக்கு மக்கள் அச்­ச­மான சூழ­லுக்குள் இருக்க வேண்­டி­ய­தில்லை. புதிய ஜனா­தி­பதி பத­வி­யேற்­ற­வுடன் மக்­களை பழி­வாங்கும் போக்­கிற்குச் செல்வார் என்று கூற­மு­டி­யாது. அதற்கு காலம் உள்­ளது. அந்த இடைப்­பட்ட காலத்தில் இந்­தி­யா­வி­னதும், ஏனைய சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் அழுத்­தங்­களை அவர் மீது பிர­யோ­கிப்போம் என்று  தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும், யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார்.

வீர­கே­சரிக்கு வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு,

கேள்வி:- ஜனா­தி­பதித் தேர்­தலில் வட­கி­ழக்கு தமிழ்ப் பேசும் மக்­களும், பெரும்­பான்மை சிங்­கள மக்­களும் இரு­வேறு பிர­தி­ப­லிப்­புக்­களைச் செய்­துள்­ள­மையை எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள்?

பதில்:- தமிழ்ப் பேசும் மக்­களும் சிங்­கள, பௌத்த தலைவர் ஒரு­வ­ருக்கே  தமது வாக்­கு­களை வழங்­கி­யுள்­ளார்கள். ஆனால் அந்த தலைவர் நாட்டில் எண்­ணிக்­கையில் சிறு­பான்­மை­யாக இருக்­கின்ற தமிழ்ப் பேசும் மக்­க­ளையும் இணைத்­துக்­கொண்டு ஆட்­சியை முன்­ன­கர்த்தக் கூடிய ஒரு­வ­ராக அவரே(சஜித் பிரே­ம­தா­ஸவே) இருப்பார் என்ற மன­நி­லையில் தான் அவ்­வாறு பிர­தி­ப­லித்­துள்­ளார்கள்.

வாக்­க­ளிப்பில் தமிழ்ப் பேசும் மக்­களின் பிர­தி­ப­லிப்பின் மூலம் புதி­தாக தெரிவு செய்­யப்­பட்ட ஜனா­தி­பதி கோத்­தா­ப­யவின் மீது எவ்­வி­த­மான நம்­பிக்­கை­யையும் வைக்­க­வில்லை என்­பது தெளி­வாக வெளிப்­ப­டு­கின்­றது. அதா­வது, சிங்­கள பௌத்­தர்கள் அல்­லாத தமிழ், முஸ்லிம், மலை­யக, கிறிஸ்­தவ சமய மக்கள் ஜனா­தி­பதி கோத்­தா­ப­யவை ஏற்­ப­தற்கு தயா­ராக இல்லை என்ற செய்தி அவர்­களின் வாக்­க­ளிப்பு சத­வீ­தத்தின் மூல­மாக வெளிப்­பட்­டுள்­ளது.

தனிச்­சிங்­கள பௌத்த வாக்­கு­களால் மட்­டுமே கோத்­தா­பய ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார். தென்­னி­லங்­கையின் பிர­தி­ப­லிப்­பா­னது இந்த நாட்டில் இன நல்­லு­றவு சாத்­தி­ய­மில்லை என்ற ஐயத்­தினை வெளிப்­ப­டுத்தும் வகையில் அமைந்­துள்­ளது. நாட்டின் எதிர்­கா­லத்­திற்கு இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லு­றவு அத்­தி­யா­வ­சி­ய­மா­னது. ஆகவே ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளவர் அனைத்து இனங்­களின் நம்­பிக்­கை­யையும் பெற்­றுக்­கொள்ள வேண்டும். அவ்­வா­றில்­லாது விட்டால் நாட்டில் பிரச்­சி­னை­க­ளுக்கு முடிவு கிட்டும் என்று எதிர்­பார்க்க முடி­யாது.

கேள்வி:- விமர்­ச­னங்­க­ளைத்­தாண்டி நாட்டின் தலை­மைப்­பொ­றுப்பு கோத்­தா­ப­ய­விடம் வழங்­கப்­பட்­டுள்ள நிலையில் தமிழ் மக்­களின் விட­யங்­களை கையாளும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அடுத்­த­கட்­ட­மாக எத்­த­கைய நகர்­வினைச் செய்­ய­வுள்­ளது?

பதில்:- தமிழ் மக்கள் தன்னை அங்­கீ­க­ரிக்­க­வில்லை என்று கோத்­தா­பய நன்கு உணர்ந்­தி­ருக்­கின்றார். தேர்தல் முடி­வுகள் அறி­விக்­கப்­பட்­டதன் பின்னர் உரை­யாற்றும் போதும், பத­வி­யேற்பு நிகழ்­வின்­போதும் அது­கு­றித்து பிர­தி­ப­லிக்கும் வகையில் கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருந்தார். தமிழ்ப் பேசும் மக்கள் தனக்கு வாக்­க­ளிக்­க­வில்லை என்­பது அவ­ரது மனச்­சாட்­சியை உறுத்­து­கின்ற வகையில் இருக்­கின்­றது என்­பதை எம்மால் உண­ர­மு­டி­கின்­றது. ஆகவே அவ்­வா­றான நிலை­மையை அவர் மாற்­றி­ய­மைக்க முயல்வார் என்று நாம் எதிர்­பார்க்­கின்றோம்.

மேலும் ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­ட­மைக்கு நாம் வாழ்த்­துக்­களைத் தெரி­விக்கும் அதே­நேரம், சிங்­கள மக்கள் அவ­ருக்கு வழங்­கிய ஆணை­யையும் நாம் ஏற்­றுக்­கொள்­கின்றோம். இருப்­பினும், தமிழ் மக்கள் கோத்­தா­ப­ய­வுக்கு வாக்­க­ளிக்­காது விடு­வ­தற்கு பல கார­ணங்கள் இருக்­கின்­றன. ஆகவே நாட்டை ஒரு­மித்து முன்­னேற்­று­வதை இலக்­காக கொண்­டி­ருக்கும் அவர் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வினை வழங்­காது விலத்திச் செல்ல முடி­யாது. எனவே தமிழ் மக்கள் ஆணை வழங்­கிய தரப்­பி­ன­ருடன் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வினை கொண்­டு­வ­ரு­வ­தற்­கான பேச்­சுக்­களை உடன் மேற்­கொள்ள வேண்டும். தீர்­வு­க­ளுக்­கான இணக்­கத்­தினைக் காண்­ப­தற்­கு­ரிய பேச்­சுக்­களை முன்­னெ­டுப்­ப­தற்கு நாம் தயா­ரா­கவே இருக்­கின்றோம்.

கேள்வி:- ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளி­டத்தில் முன்­வைப்­ப­தற்­காக ஐந்து தமிழ்த் தேசியக் கட்­சிகள் இணைந்து தயா­ரித்த 13அம்சக் கோரிக்­கை­களை மையப்­ப­டுத்தி கூட்­டு­மு­டி­வொன்றை எடுக்­க­மு­டி­யா­து­போ­னதேன்?

பதில்:- 13அம்­சக்­கோ­ரிக்­கைகள் எமது அங்­கீ­கா­ரத்­து­டனும் இணக்­கத்­து­டனும் தான் தயா­ரிக்­கப்­பட்­டன. நாங்கள் அந்தச் செயற்­பாட்டைக் குழப்­ப­வில்லை. ஆனால் அந்த ஆவ­ணத்­தினை எந்த வேட்­பா­ள­ரி­டத்­திலும் முன்­வைக்­க­வில்லை என்ற குற்­றச்­சாட்டு எம்­மீது உள்­ளது. அந்­தக்­கோ­ரிக்கை ஆவ­ணத்­தினை முன்­னி­லைப்­ப­டுத்­தாத நிலை­யி­லேயே கோத்­தா­ப­ய­வுக்கு இவ்­வ­ளவு தூரம் வெற்றி கிடைத்­தி­ருக்­கின்ற நிலையில் தற்­செ­ய­லாக சஜித் பிரே­ம­தா­ஸ­வுடன் அந்த ஆவ­ணத்­தினை முன்­னி­லைப்­ப­டுத்தி இணக்கம் கண்­டி­ருந்தால் அவ­ரு­டைய தோல்வி மிக மோச­மாக இருந்­தி­ருக்கும்.

கேள்வி:- ஐந்து கட்­சி­களின் கூட்­டி­ணைவும் 13அம்சக் கோரிக்­கை­களும் கோத்­தா­ப­யவின் வெற்­றியில் செல்­வாக்­கினைக் கொண்­டி­ருக்­கின்­றது என்று கரு­து­கின்­றீர்­களா?

பதில்:- முழு­மை­யாக இல்­லாது விட்­டாலும் அவ­ரு­டைய வெற்­றியில் அந்த விடயம் உத­வி­யாக இருந்­தி­ருக்­கின்­றது. அந்­தக்­கோ­ரிக்­கை­களை மையப்­ப­டுத்தி பிர­சாரம் செய்­யப்­பட்­டுள்ள நிலையில் நிச்­ச­ய­மாக தாக்­கத்­தினை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும். எமது கோரிக்­கை­களில் எந்த தவறும் இருக்­க­வில்லை.

கேள்வி:- சஜித் பிரே­ம­தா­ஸவின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தின் அடிப்­ப­டையில் அவரை ஆத­ரிப்­ப­தாக கூட்­ட­மைப்பு விடுத்த பகி­ரங்க அறி­விப்பு தென்­னி­லங்­கையில் கணி­ச­மான தாக்­கத்­தினை செலுத்­தி­யி­ருக்­கின்­ற­தல்­லவா?

பதில்:- நாங்கள் மிகவும் காலம் தாழ்த்­தியே எமது அறி­விப்­பினைச் செய்­தி­ருந்தோம். எமது அறி­விப்­புக்கு முன்­ன­தா­கவே மக்கள் தீர்­மானம் எடுத்­து­விட்­டார்கள். ஆகவே எமது அறி­விப்பின் பின்னர் மக்கள் தமது தீர்­மா­னங்­களை மாற்­றி­ய­மைத்­தி­ருப்­பார்கள் என்று நான் கரு­த­வில்லை.

கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நிபந்­த­னை­யின்றி சஜித் பிரே­ம­தா­ஸவை ஆத­ரிக்கும் முடிவை எடுத்து தமிழ் மக்­களை தவ­றாக வழி­ந­டத்தி நெருக்­க­டிக்குள் தள்­ளி­விட்­டுள்­ளது என்ற விமர்­சனம் தமிழ்த் தரப்­புக்­க­ளி­டத்­தி­லி­ருந்து முன்­வைக்­கப்­ப­டு­கின்­ற­தல்­லவா?

பதில்:- அவ்­வா­றான விமர்­சனம் செய்­யப்­ப­டு­கின்­றது. அதனை நாம் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. காரணம், எமது முடிவும் தமிழ் மக்­களின் முடிவும் ஒன்­றா­கவே இருந்­தது. அதில் இரு­வேறு நிலைப்­பா­டுகள் காணப்­பட்­டி­ருக்­க­வில்லை. நாம் எடுத்த தீர்­மா­னத்­திற்கு அமை­வாக தேர்தல் முடிவு வர­வில்லை என்­ப­தற்­காக அது தவறு என்று கொள்ள முடி­யாது. மேலும் கோத்­தா­ப­ய­வுக்கு வாக்­க­ளிப்­ப­தற்­கான எந்­த­வொரு கார­ணங்­களோ சூழ்­நி­லை­களோ அத்­த­ரு­ணத்தில் எழுந்­தி­ருக்­க­வில்லை என்­ப­தையும் கவ­னத்தில் கொள்ள வேண்டும்.

கேள்வி:- கோத்­தா­பய ராஜ­பக் ஷ ஆட்­சியில் அமர்ந்தால் தற்­போது ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்ற ஜன­நா­யக வெளி அற்­றுப்­போகும் என்று எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்த நிலையில் அவரே ஆட்­சிப் ­பொ­றுப்­பினை ஏற்றுக் கொண்­டுள்­ளாரே?

பதில்:- கோத்­தா­பய ராஜ­பக் ஷ பாது­காப்புச் செய­லா­ள­ராக இருந்து போரை முடி­வுக்கு கொண்டு வந்த காலப்­ப­கு­தியும், அவ­ரு­டைய தேர்தல் பரப்­புரை காலப்­ப­கு­தியும்,  ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­றதன் பின்­ன­ரான தற்­போ­தைய காலப்­ப­கு­தியும் வெ ள் வேறு­பட்ட சூழல்­களைக்  கொண்­ட­தாக இருக்­கின்­றன. ஆகவே அவரால் எடுத்த எடுப்பில் எந்­த­வொரு செயற்­பா­டு­க­ளையும் மேற்­கொள்ள முடி­யாது என்றே எதிர்­பார்க்­கின்றோம். எமது எதிர்­பார்ப்­பி­னையும் மீறி அவர் தனது சுய­ரூ­பத்­தினைக் காண்­பிக்க முயன்றால் விளை­வு­களைத் தடுப்­ப­தற்­காக எமக்­குள்ள சர்­வ­தேச தொடர்­பு­களை அந்­தந்த சந்­தர்ப்­பங்­க­ளின்­போது உப­யோ­கிப்போம். இந்­த­வி­ட­யங்­களை பொறுத்­தி­ருந்தே பார்க்க வேண்­டி­யுள்­ளது.

கேள்வி:- ஜனா­தி­பதித் தேர்­தலில் சிங்­கள பெருந்­தே­சி­ய­வா­தமும், பௌத்த மத முன்­னு­ரி­மைப்­ப­டுத்­தலும் தென்­னி­லங்­கையில் பெருந்­தாக்­கத்­தினை ஏற்­ப­டுத்­தி­யுள்ள நிலையில் இனங்­க­ளுக்கு இடை­யி­லான நல்­லி­ணக்கம் பற்­றிய கருத்­தா­டல்கள் சாத்­தி­ய­மா­கு­மென்ற நம்­பிக்கை உங்­க­ளுக்கு காணப்­ப­டு­கின்­றதா?

பதில்:- சிங்­கள பெருந்­தே­சி­ய­வாதம், பௌத்த மதம் என்­ப­வற்­றுக்கு அப்பால் வலு­வற்ற ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆட்சி, பொரு­ளா­தார நெருக்­க­டிகள், ஊழல்­மோ­ச­டிகள், நடை­மு­றைச்­சாத்­தி­ய­மான விட­யங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டாமை போன்ற விட­யங்­களும் பெரு­ம­ளவில் தாக்­கத்­தினைச் செலுத்­தி­யுள்­ளன. ஆட்­சியில் இருக்கும் தரப்பு ஆத­ர­வாக வாக்­கு­களைப் பெற்று தம்மைத் தக்­க­வைப்­ப­தற்கு ஐ.தே.க திண­றி­யி­ருந்­தது.

கடந்த காலத்­தி­லி­ருந்து ராஜ­பக் ஷ ஆட்­சியும் இந்­தக்­கா­ர­ணங்­களை முன்­னி­லைப்­ப­டுத்­தியே வீழ்த்­தப்­பட்­டது. இவ்­வா­றான நிலையில் தற்­போது பொது­ஜன பெர­முன என்ற பெயரில் புதிய முகத்­துடன் அந்­தக்­கு­ழு­வினர் மக்கள் ஆணையை கோரி­யி­ருந்­தார்கள். அத்­துடன் அவர்கள் முன்­னி­லைப்­ப­டுத்­தி­யவர் காரியச் சித்தர் என்ற எண்­ணப்­பாடு தென்­னி­லங்கை மக்கள் மத்­தியில் விதைக்­கப்­பட்­டது. இவ்­வா­றான விட­யங்கள் தென்­னி­லங்கை மக்­களின் மாற்­றத்­திற்கு வித்­திட்­டி­ருக்­கலாம்.

கேள்வி:- கடந்த நான்கு ஆண்­டு­களில் ஐ.தே.க தலை­மை­யி­லான ஆட்­சிக்கு கூட்­ட­மைப்பு நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்­கி­யி­ருந்­த­போதும் அதனால் தமிழ் மக்­க­ளுக்கு எவ்­வி­த­மான நலன்­களும் கிடைக்­க­வில்­லை­யென்றும் மாறாக பேரம்­பேசும் சக்­தியே மலி­னப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது என்றும் கூறப்­ப­டு­கின்­றது. அத்­துடன் கூட்­ட­மைப்பு ஐ.தே.க சார்ந்த முடி­வு­களை எடுப்­ப­தற்கு உங்­க­ளு­டைய செல்­வாக்கும் அதி­க­மாக இருந்­த­தா­கவும் விமர்சிக்­கப்­ப­டு­கின்­றதே?

பதில்:- 2015இல் ஜன­நா­யக பண்­பு­களைக் கொண்ட ஆட்­சியை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு நாமும் உழைத்­த­வர்­க­ளாக இருக்­கின்றோம். அவ்­வாறு ஏற்­ப­டுத்­திய ஆட்­சி­மாற்­றத்­தினை தக்­க­வைப்­பதும் அத­னூ­டாக எமது இலக்­கு­களை அடைய முயன்­ற­மையும் எமக்­கி­ருந்த பெரும் கட­மை­யா­கவே இருக்­கின்­றது. நாம் எதிர்­பார்த்த இலக்­கு­களை அந்த ஆட்சி முழுமை­யாக செய்­ய­வில்லை என்­ப­தற்­காக அந்த ஆட்­சி­யா­ளர்­களை அகற்­றி­விட முடி­யாது. நாம் புதிய அர­சி­ய­ல­மைப்பு உட்­பட பல விட­யங்­களை முன்­னெ­டுத்­தி­ருந்தோம். துர­திர்ஷ்­ட­வ­ச­மாக அந்த விட­யங்கள் முடி­வுற்­றி­ருக்­கா­மையின் கார­ண­மா­கவே விமர்­ச­னங்­களை முன்­வைக்­கின்­றார்கள்.

மேலும், நாம் அணு­கு­முறை ரீதி­யாக ஐக்­கிய தேசியக் கட்சி சார்­பாக நடந்­து ­கொண்டோம். தீர்­மா­னங்­களை எடுத்தோம் என்று கூறு­வது தவ­றா­ன­தாகும். நாம் எமக்கு ஆணை­வ­ழங்­கிய தமிழ் மக்கள் சார்ந்தே முடி­வு­களை எடுத்து செயற்­பட்­டி­ருந்தோம். அந்த முடி­வு­களும், அணு­கு­மு­றை­களும் சில சந்­தர்ப்­பங்­களில் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு சார்­பாக இருந்­தி­ருக்­கலாம்.

கேள்வி:- கோத்­தா­ப­யவின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தமிழ் மக்கள் எதிர்­பார்த்த இனப்­பி­ரச்­சினை தீர்வு, பொறுப்­புக்­கூறல் விட­யங்கள் சம்­பந்­த­மாக கூறப்­பட்­டி­ருக்­கா­ததன் கார­ணத்­தி­னா­லேயே கூட்­ட­மைப்பு சஜித்தை ஆத­ரிக்கும் தீர்­மா­னத்­தினை எடுத்­த­தாக கூறி­யி­ருந்­தது. இந்­நி­லையில் தற்­போது இந்த விட­யங்கள் குறித்து புதிய தலைவர் எவ்­வ­ளவு தூரம் கரி­சனை கொள்வார் என்று எதிர்­பார்க்­கின்­றீர்கள்?

பதில்:- புதிய ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்ட கோத்­தா­ப­யவின் மீது அத்­த­கைய நம்­பிக்கை எமக்கு ஆரம்­பத்­தி­லேயே ஏற்­ப­டா­மையின் கார­ணத்­தி­னா­லேயே அவ­ருக்கு எதி­ராக வாக்­க­ளிக்­கு­மாறு கோரிக்கை விடுத்­தி­ருந்தோம். தனியே சிங்­கள, பௌத்த நிலைப்­பாட்­டினை முன்­னி­லைப்­ப­டுத்தி ஆட்­சியை முன்­னெ­டுப்­பது என்­பது அவர்­க­ளுக்கு சங்­க­ட­மான விட­ய­மா­கவே இருக்கும். ஆகவே அவர்­க­ளுடன் இந்த விட­யங்­களை கையாள்­வ­தற்கு நாம் புதிய அணு­கு­மு­றை­யொன்றை முன்­னெ­டுக்க எதிர்­பார்த்­தி­ருக்­கின்றோம்.

கேள்வி:- தற்­போ­தைய பூகோளச் சூழலில் தமிழ் மக்­க­ளுக்­கான பொறுப்­புக்­கூறல் உள்­ளிட்ட விட­யங்­களை எவ்­வ­ளவு தூரம் உயிர்ப்­புடன் முன்­ந­கர்த்த முடியும் என்று கரு­து­கின்­றீர்கள்?

பதில்:- ஜனா­தி­ப­தி­யாக கோத்­தா­பய பத­வி­யேற்­ற­வுடன் அமெ­ரிக்க இரா­ஜாங்கச் செய­லாளர்  அனுப்­பிய செய்­தியில் பொறுப்­புக்­கூறல் பற்றி சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். ஆட்­சி­மா­றி­னாலும் பொறுப்­புக்­கூறல் விட­யங்கள் அகன்று போகாது. கடந்த ஆட்­சி­யா­ளர்கள் வாக்­கு­று­தி­களை வழங்கி கால இழுத்­த­டிப்­பினைச் செய்­தார்கள். தற்­போ­தை­ய­வர்கள் விட­யங்­களை முன்­னெ­டுக்க மாட்டோம் என்று முரண்டு பிடிப்­பார்கள். அவ்­வா­றான சூழலில் ஆட்­சி­யா­ளர்கள் தப்­பித்­துக்­கொள்­வ­தற்கு சர்­வ­தேச சமூகம் இட­ம­ளித்­து­வி­டாது.

கேள்வி:- வடக்கு கிழக்கு மக்கள் தேர்­தலில் வெளிப்­ப­டுத்­திய பிர­தி­ப­லிப்­புக்­க­ளுக்கு மாறான விளைவு ஏற்­பட்­டுள்­ள­மையால் அவர்கள் அச்­ச­மான சூழலில் இருப்­ப­தாக கூறப்­ப­டு­கின்ற நிலையில் அவர்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சியல் தரப்பு என்ற வகையில் உங்­களின் நிலைப்­பாடு என்­ன­வாக உள்­ளது?

பதில்:- மக்கள் அவ்­வாறு அச்­ச­மான சூழ­லுக்குள் இருக்க வேண்­டி­ய­தில்லை. புதிய ஜனா­தி­பதி பத­வி­யேற்­ற­வுடன் தமிழ் மக்­களை பழி­வாங்கும் போக்­கிற்குச் செல்வார் என்று கூற­மு­டி­யாது. அதற்கு காலம் உள்­ளது. அந்த இடைப்­பட்ட காலத்தில் இந்­தி­யா­வி­னதும், ஏனைய சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் அழுத்­தங்­களை அவர் மீது பிர­யோ­கிப்போம். அந்த அழுத்­தங்கள் அவ­ரைச்­சுற்­றி­யி­ருக்கும் வரையில் வித்­தி­யா­ச­மான எந்த அணு­கு­மு­றை­க­ளையும் அவரால் கையாள முடியாது.

கேள்வி:- ரணில் விக்கிரமசிங்க சார்பானவர்கள் சஜித் பிரேமதாஸவின் தோல்விக்கு திரைமறைவில் செயற்பாட்டார்கள் என்ற விமர்சனம் ஐ.தே.க.வினுள் காணப்படுகின்ற நிலையில் கூட்டமைப்பும் ரணில் விக்கிரமசிங்க சார்ந்து செயற்பட்டதாகவும் குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்ப டுகின்றதல்லவா?

பதில்:- ரணில் விக்கிரமசிங்க சார்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்விதமான செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் வடக்கு கிழக்கில் ரணில் விக்கிரமசிங்கவே தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவார் என்றும் அதன் மூலம் அதிகளவு வாக்குகளைப் பெற முடியும் எனவும் அவர்களே தீர்மானித்தனர். இதனால் ரணில் விக்கிரமசிங்கவின் பிரசாரம் வடக்கு கிழக்கிற்குள் முடக்கப்பட்டது. எனினும் வடக்கு கிழக்கில் சஜித் பெருவாரியாக வெற்றி பெற்றுள்ளார். ஆகவே ரணிலுடன் கூட்டமைப்பு இணைந்து சஜித்தின் தோல்விக்காக செயற்பட்டது என்பது அபத்தமான குற்றச்சாட்டாகும்.

கேள்வி:- அமைச்சு பதவிகளை எடுப்பதற்குரிய முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றீர்களா?

பதில்:- நாங்கள் புதிய ஆட்சியில் அமைச்சுப்பதவிகளை எடுக்கப்போவதாக தவறான தகவல்களே பிரசாரம் செய்யப்படுகின்றன. எம்மைப்பொறுத்தவரையில் அமைச்சுப்பதவிகளை பெறுவதில் கொள்கை சார்ந்த நிலைப்பாடே உள்ளது.

அதாவது, இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கும் வரையில் நாம் மத்திய அமைச்சரவையில் பங்கேற்பதில்லை என்பதே அதுவாகும். அதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். ஆனால் இந்தக்கொள்கையில் நாம் நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பில் எதிர்காலத்தில் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தேனே தவிர, உடனடியாக அந்த மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றோ அல்லது புதிய ஆட்சியில் இணைவதென்றோ கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கவில்லை.

(நேர்காணல் - ஆர்.ராம் )