பொலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கும் ‘தலைவி ’படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த ஆண்டில் வாட்ச்மேன், தேவி2 ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘தலைவி’. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே தருணத்தில் தயாராகி வரும் இந்தப் படத்தில், கதையின் நாயகியாக பொலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார்.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி, உருவாகிவரும் இந்தப்படத்தில் அரவிந்த்சாமி எம்ஜிஆராக நடிக்கிறார். இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெறவிருக்கிறது. இந்த படத்திற்காக நான்கு தோற்றங்களில் நடித்துவரும் பொலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டு வருகிறார்.

சில தினங்களுக்கு முன்பு அதிமுக கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு சென்னையில் கூடிய நிலையில், சென்னை முழுவதும், தமிழகம் முழுவதும், இணையம் முழுவதும் ‘தலைவி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி, வைரலாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மைசூர், சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடைபெறவிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.