(எம்.மனோசித்ரா)

தெற்காசியாவில் எயிட்ஸ் பரவல் குறைவாகக் காணப்படும் நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குகிறது. 

எனினும் இவ்வருடத்தில் மாத்திரம் இது வரையில் 314 எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியுள்ளவர்கள் இணங்காணப்பட்டுள்ளதோடு, எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு மூன்று உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக பாலியல் சார் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.

சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சின் பாலியல் சார் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவினால் கொழும்பில் விழிப்புணர்வு பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ' எயிட்ஸ் நோயை ஒழிப்பதற்கு ஒன்றிணைவோம் ' என்ற தொனிப்பொருளில் இந்த பேரணி இடம்பெறவுள்ளது.

டிசம்பர் முதலாம் திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதே எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு கொழும்பில் 30 ஆம் திகதி சனிக்கிழமை விழிப்புணர்வு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 8.30 மணியளவில் கொழும்பு மருதானையில் இந்த பேரணி ஆரம்பமாகி பொரளை சென்று மருதானை சந்தியில் நிறைவடைவதோடு, நகர சபை மண்டபத்தில் விஷேட கூட்டமும் நடைபெறவுள்ளது.  

மேலும் நகர சபை மண்டபத்தில் கண்காட்சியும், இலவச இரத்த பரிசோதனையும் நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சியில் சந்தேகநபர்கள் சிலரது சித்திரங்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன. அத்தோடு நாடு முழுவதிலும் பாதாதைகள் மூலமான விழிப்புணர்வு நடவடிக்கைகள் பொலிஸாருடன் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார்.