ஒவ்­வாமை என்­பது பெரும்­பா­லான­வர்­க­ளுக்கு உட­லுக்குத் தீங்கு விளை­விக்­காத கார­ணி­க­ளுக்கு எதி­ராக எமது உட­லி­லுள்ள நோயெ­திர்ப்புத் தொகுதி காண்­பிக்கும் வலி­மை­யான எதிர்­வி­ளை­வாகும். இவ் ஒவ்­வா­மையை ஏற்­ப­டுத்தும் கார­ணிகள் எமது சுற்­றுச்­சூ­ழ­லிலும் உணவுப் பொருட்­க­ளிலும் காணப்­ப­டு­கின்­றன. உணவுப் பொருட்­களில் நிலக்­க­டலை, முட்டை, பசுப்பால், கோதுமை, சில வகை மீன்கள், வெளி­யோ­டு­டைய மீன்கள், இறால், நண்டு போன்­றவை ஒவ்­வா­மையை ஏற்­ப­டுத்தக்கூடிய கார­ணி­க­ளாக அறி­யப்­ப­டு­கின்­றன.

உல­க­ளா­விய ரீதியில் ஒவ்­வாமை ஏற்­ப­டு­ப­வர்­களின் எண்­ணிக்கை தற்­பொ­ழுது அதி­க­ரித்து வரு­கி­றது. ஒவ்­வா­மை­யா­னது ஒரு­வ­ருக்கு சாதா­ரண தும்மல், கண்­களில் எரிச்சல், கண்ணீர் வடிதல், கண் சிவத்தல், தோல் சிவத்தல், தோல் அரிப்பு மற்றும் இறப்பு போன்­ற­வற்றை ஏற்­ப­டுத்­தலாம். ஒவ்­வா­மை­யா­னது ஒரு தனி­ந­ப­ருக்கு மாத்­திரமன்றி, மொத்தக் குடும்­பத்­துக்கும் உள ரீதி­யா­கவும் பண ரீதி­யா­கவும் பாதிப்பை ஏற்­ப­டுத்­து­கின்­றது.

அதனால் ஒவ்­வாமை வரும் முன் காப்­ப­தற்­கான வழி­மு­றைகள் இருப்பின் மிகுந்த பிர­யோ­சன­மாக இருக்கும். ஆய்­வுகள் பல இது சம்­பந்­த­மாக மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­துடன் அவற்றின் முடி­வு­களைக் கொண்டு சில ஒவ்­வாமை சம்­பந்­த­மான முக்­கி­ய­மான குழுக்கள் சில பரிந்­து­ரை­களை வழங்­கி­யுள்­ளன.  அவற்றில் உணவு மற்றும் போசணை சம்­பந்­த­மான பரிந்­து­ரை­களைப் பற்றி இக்­கட்­டு­ரையில் விளக்­கப்­பட்­டுள்­ளது. இப் பரிந்­து­ரைகள் ஏற்­க­னவே ஒவ்­வாமை இருப்­பது கண்­ட­றி­யப்­பட்ட குழந்­தை­க­ளுக்கு பயன்­ப­டுத்த முடி­யாது.

ஒரு குழந்­தையின் பெற்றோர் அல்­லது சகோ­த­ரர்கள் ஒவ்­வாமை நோய் உடை­ய­வர்­க­ளாக இருப்பின் அக்­கு­ழந்­தைக்கு ஒவ்­வாமை ஏற்­படும் சாத்­தி­யக்­கூ­றுகள் அதி­க­மாகும்.    கர்ப்ப காலம் மற்றும் தாய்ப்­பா­லூட்டும் காலங்­களில் தாய் ஒவ்­வாமை ஏற்­ப­டுத்தக் கூடிய உண­வுளை தவிர்த்தல், கர்ப்ப காலத்­திலும் தாய்ப்­பா­லூட்டும் காலத்­திலும் தாய் ஒவ்­வாமை ஏற்­ப­டுத்தக் கூடிய உண­வு­களைத் தவிர்த்தலானது, வயிற்றிலிருக்கும் குழந்­தையை ஒவ்­வா­மை­யி­லி­ருந்து பாது­காக்­கின்­றது என்று பெரும்­பா­லா­ன­வர்­களால் நம்­பப்­ப­டு­கின்­றது. ஆனால் ஆய்வு முடி­வுகள் அவ்­வா­றான பாது­காப்­புகள் கிடைப்­ப­தாக காட்­ட­வில்லை.

இதனால் கர்ப்ப காலத்­திலும் தாய்ப்­பா­லூட்டும் காலத்­திலும் தாய் ஒவ்­வாமை ஏற்­ப­டுத்தக் கூடிய உண­வு­களைத் தவிர்க்­கும்­படி எந்­த­வொரு பரிந்­து­ரையும் செய்­யப்­ப­ட­வில்லை. உண்­மையில் இவ்­வாறு உண­வு­களைத் தவிர்ப்­பதால் கர்ப்­பி­ணி­க­ளுக்கு தேவை­யான போஷாக்கு போதி­ய­ளவு கிடைக்­காமல் பாதிப்­ப­டை­கின்­றனர்.

தாய்ப்­பா­லூட்­டுதல்

ஒரு குழந்­தைக்கு முதல் ஆறு மாதங்­க­ளுக்கு தாய்ப்பால் மாத்­தி­ரமே கொடுக்க வேண்டும். தாய்ப்­பாலில் நோய் எதிர்ப்புக் கார­ணி­களும் ஒவ்­வா­மைக்கு எதி­ராக செயற்­படக் கூடிய கார­ணி­களும் உள்­ளன. இதன் மூலம் இரண்டு வய­துக்குக் குறைந்த வய­து­டைய குழந்­தை­க­ளுக்கு தோல் சம்­பந்­த­மான ஒவ்­வாமை மற்றும் பசுப்­பா­லினால் ஏற்­படும் ஒவ்­வாமை ஏற்­ப­டுதல் குறைக்­கப்­ப­டு­வ­துடன் நான்கு வய­துக்குக் குறை­வான குழந்­தை­க­ளுக்கு இழுப்பு ஏற்­படும் எண்­ணிக்­கையைக் குறைக்­கலாம் என்று அறி­யப்­பட்­டுள்­ளது. ஆறு மாதங்­களின் பின்னர் நிரப்பு உண­வுகள் ஆரம்­பிக்கப்பட்ட பின்­னரும் தாய்ப்­பாலை தொடர்ந்து வழங்­கு­வது உணவு சம்­பந்­த­மான ஒவ்­வா­மை­யி­லி­ருந்து பாது­காப்பை வழங்­கு­வ­தாகக் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

போத்தல் பால் வழங்­குதல் ஒவ்­வாமை சம்­பந்­த­மாக நன்­மையா, தீமையா?

போத்தல் பால் வழங்­கு­வதை விட தாய்ப்பால் வழங்­கு­வ­த­னா­லேயே  ஒவ்­வாமை ஏற்­ப­டு­வ­தி­லி­ருந்து பாது­காப்பு அதி­க­மாகக் கிடைக்­கின்­றது. போத்தல் பால் வழங்­கு­வது பரிந்­துரை செய்­யப்­ப­ட­வில்லை. ஆனால் ஒரு குழந்­தைக்கு நான்கு முதல் ஆறு மாதங்­க­ளுக்கு தாய்ப்பால் மட்டும் வழங்க முடி­யாமல் இருப்­ப­துடன் அக்­கு­ழந்தை ஒவ்­வாமை ஏற்­படும் சாத்­தி­யக்­கூ­றுகள் அதி­க­மாக உள்ள குழந்­தை­யாக அறி­யப்­படின் (பெற்றோர் அல்­லது சகோ­த­ரர்கள் ஒவ்­வாமை நோய் உடை­ய­வர்­க­ளாக இருப்பின்) ஒவ்­வா­மைக்­காக விசே­ட­மாக தயா­ரிக்­கப்­பட்­டுள்ள பால்மா வழங்­குதலானது, பசுப்­பாலில் உள்ள புர­தத்தைக் கொண்டு தயா­ரிக்­கப்­பட்ட பால்மா வழங்­கு­வதை விட கூடு­த­லான பாது­காப்பை தோல­ழற்­சிக்கு எதி­ராக வழங்­கு­கின்­றது என்று கூறப்­ப­டு­கி­றது. ஆயினும் இது சம்­பந்­த­மாக மேலும் ஆய்­வுகள் தேவைப்­ப­டு­கின்­றன.

நிரப்பு உண­வு­களை வழங்­குதல்

குழந்­தைக்கு ஆறு மாதங்கள் நிறைவில் நிரப்பு உண­வு­களை வழங்க வேண்டும். மசித்த சோறு மற்றும் உரு­ளைக்­கி­ழங்­கி­லி­ருந்து ஆரம்­பித்து சிறிது சிறி­தாக மரக்­க­றிகள், பழங்கள், மீன், முட்டை, இறைச்சி ஆகி­ய­வற்றை வழங்­கலாம். ஒரு நேரத்தில் ஒரு உணவு மட்­டுமே ஆரம்­பிக்க வேண்டும். மூன்று தொடக்கம் ஐந்து நாட்­களின் பின்னர் அடுத்த உணவை வழங்­கலாம்.

இதன் மூலம் ஒவ்­வா­மைகள் ஏற்­பட்டால் அவற்­றையும் அவ் ஒவ்­வா­மையை ஏற்­ப­டுத்தும் உண­வு­க­ளையும் அறிந்து கொள்ள முடியும். ஒவ்­வாமை ஏற்­ப­டுத்தக் கூடிய உண­வு­களை ஆரம்ப நிரப்பு உண­வு­க­ளாக வழங்­கு­வதைத் தவிர்த்தல் நன்று.  ஆரம்­பத்தில் வழக்­க­மாக கொடுக்­கப்­படும் நிரப்பு உண­வு­களை வழங்கி அவை குழந்­தையின் உட­லினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் ஒவ்­வாமை ஏற்­ப­டுத்தக் கூடிய உண­வு­களை நிரப்பு உண­வு­க­ளாக வழங்­கலாம்.  அவற்­றுக்கு ஒவ்­வாமை ஏற்­ப­ட­வில்­லை­யாயின், அவ் உணவை தொடர்ந்து வழங்­கலாம்.

ஒவ்­வாமை ஏற்­ப­டுத்தக் கூடிய உண­வு­களை மிகவும் தாம­தித்து வழங்­கு­வ­தனால் ஒவ்­வாமை ஏற்­படக் கூடிய வாய்ப்­புக்கள் அதி­க­மா­கி­ன்றன. பெற்­றோ­ருக்கு ஒவ்­வா­மையின் போது ஏற்­படும் அறி­கு­றி­களைப் பற்றி விளக்­கங்கள் வழங்க வேண்டும். சில மரக்­க­றிகள் மற்றும் பழங்கள் அவற்றிலுள்ள அசிட் அளவின் கார­ண­மாக வாயைச் சுற்றி கடிப்பு, தோல் சிவத்தல் முத­லி­ய­வற்றை ஏற்­ப­டுத்­தலாம். உதா­ரணம் தக்­காளி. ஆனால் இவ் வகை உண­வுகள் உடலில் பெரிய மாற்றம் எத­னையும் ஏற்­ப­டுத்­து­வ­தில்லை. ஆகையால் இவ்­வகை உண­வு­க­ளையும் தாம­தி­க்காமல் வழங்­கலாம்.

ஒவ்­வாமை சம்­பந்­த­மான வைத்­திய நிபு­ணரை கலந்­து­ரை­யாட வேண்­டிய சந்­தர்ப்­பங்கள் எவை?

பின்­வரும் சந்­தர்ப்­பங்­களில் ஒவ்­வாமை சம்­பந்­த­மான வைத்­திய நிபு­ணரை சந்­தித்து தனி­ந­ப­ராக உணவு சம்­பந்­த­மாக அறி­வு­ரைகள் பெற்றுக் கொள்ள பரிந்­து­ரைகள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

குழந்­தைக்கு முறை­யான சிகிச்சை அளிக்­கப்­பட்ட பின்­னரும் தொடர்ந்து தோல­ழற்சி காணப்­ப­டு­மாயின் அல்­லது குழந்தை ஒன்­றுக்கு உண­வுக்குப் பின்னர் உட­ன­டி­யாக ஒவ்­வாமை ஏற்­ப­டு­மாயின்,

சில வேளை­களில் ஒரு உண­வுக்கு ஒவ்­வாமை ஏற்­ப­டு­மாயின் வேறு சில உண­வு­க­ளுக்கும் ஒவ்­வாமை ஏற்­ப­டலாம். உதா­ர­ணத்­துக்கு முட்­டைக்கு ஒவ்­வ­ாமை இருக்­கு­மாயின், நிலக்­க­ட­லைக்கும் ஒவ்­வாமை ஏற்­ப­டலாம். இச்­சந்­தர்ப்­பங்­களில் ஒவ்வாமை சம்பந்தமான வைத்திய நிபுணரை சந்தித்து அறிவுரைகள் பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வாமை சம்பந்தமான இரத்தப் பரிசோதனையில் இதுவரை குழந்தைக்கு அறிமுகப்படுத்தாத ஏதாவது ஒரு உணவுக்கு ஒவ்வாமை இருப்பது கண்டறியப்படின்.

 குழந்தை ஒன்றுக்கு உணவுக்குப் பின்னர் உடனடியாக ஒவ்வாமை ஏற்பட்டதுடன் ஒவ்வாமை சம்பந்தமான இரத்தப் பரிசோதனையில் அவ்உணவுக்கு ஒவ்வாமை இருப்பது கண்டறியப்படின்.

குழந்தை ஒன்றுக்கு உணவுக்குப் பின்னர் உடனடியாக ஒவ்வாமை ஏற்பட்டதுடன் இரத்தப் பரிசோதனையில் அவ்உணவுக்கு ஒவ்வாமை இருப்பது கண்டறியப்படவில்லையாயின்.

குழந்தையின் சகோதரர்களில் யாருக்காவது நிலக்கடலைக்கு ஒவ்வாமை இருக்குமாயின்.

வைத்தியர் காயத்திரி கணேசமூர்த்தி,

பயிலுநர்,

போசணைப்பிரிவு.