(பா.ருத்ரகுமார்)

கொழும்பு, கம்பஹா மற்றும் கேகாலை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய சகல மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளிலும் நாளை தொழிற்சங்க நடவடிக்கை மற்றும் பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

தங்களது நிலைப்பாடுகள் அனைத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கலந்துரையாடப்பட வேண்டும். இல்லையேல் தொடர்ந்து எமது போராட்டத்தை முன்னெடுப்போம் என குறித்த சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொழில்சார் நிபுணர்கள் அமைப்பின் கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஹேரத் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

கடந்த காலங்களில் வைத்தியர்களின் இடமாற்றத்தில் அரசியல் தலையீடுகள் காணப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சுகாதார அமைச்சில் குடும்ப ஆட்சி நிலவுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஜனாதிபதி உட்பட்ட முக்கிய பிரமுகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம்.

வைத்தியர்களின் இடமாற்றம் தொடர்பில் சுகாதார அமைச்சு மற்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் என்பன இணைந்து ஏற்படுத்திக்கொண்ட சட்ட வரைவுத்திட்டங்களுக்கேற்பவே செயற்படுத்தப்பட்டு வருகின்றது. 

இதனடிப்படையில் குறித்த முறைமையில் அரசியல் பலிவாங்கல்களோ அல்லது அரசியல்; தலையீடுகளோ காணப்படவில்லை. ஆனால் தற்போது சுகாதார அமைச்சில் உள்ள பலரும் தங்களது சுய நோக்கத்திற்காக பயன்படுத்துகின்றனர்.

மேலும் வைத்தியர்களின் இடமாற்றம் தொடர்பில் அரசும் வைத்திய சங்கங்களும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். நகரம் கிராமம் என்ற வேறுபாடுகளை விடுத்து இலங்கையின் அனைத்து தரப்பினருக்கும் சேவை புரியக்கூடிய வகையிலேயே குறித்த இடமாற்றங்கள் இடம்பெற வேண்டும். ஆனால் தற்போது சுகாதார சேவையின் தரத்தை சீர்குழைக்கும் வகையிலான அரசியல் தலையீடுகளே அதிகளவில் காணப்படுகின்றன.

இதற்கமையவே வைத்திய சேவையில் அரசியற் தலையீடுகளை கண்டித்து நாடுதழுவிய ரீதியில் வேலைநிறுத்த போராட்டம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.