ஜப்பானுக்கு முக்கியத்துவம் மிக்க சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள பாப்பரசர் பிரான்சிஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை அணு குண்டுத்தாக்குதலுக்குள்ளான நாகசாகி மற்றும் ஹிரோஷிமா பிராந்தியங்களிலுள்ள போர் ஞாபகார்த்த ஸ்தலங்களுக்கு விஜயம் செய்தார்.

இதன்போது அவர் 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்தப் பிராந்தியத்தில் நடத்தப்பட்ட அணு குண்டுத் தாக்குதலில் சிக்கி உயிர் தப்பி தற்போதும் வாழும் மக்களுடன் சந்திப்பை மேற்கொண்டார்.
அமெரிக்காவால் ஹிரோஷிமா நகர் மீது நடத்தப்பட்ட உலகின் முதலாவது அணுகுண்டுத் தாக்குதலில் குறைந்தது 140,000 பேரும் அதற்கு 3 நாட்கள் கழித்து நாகசாகி நகர் மீது நடத்தப்பட்ட இரண்டாவது அணுகுண்டுத் தாக்குதலில் குறைந்தது 74,000 பேரும் பலியாகியிருந்தனர்.
இந்நிலையில் நாகசாகி நகரில் கூடியிருந்த பெருந்தொகையான மக்கள் மத்தியில் உரையாற்றிய பாப்பரசர், அணு ஆயுத உற்பத்தி மற்றும் அதிகரித்து வரும் ஆயுத விற்பனை என்பவற்றுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அணு குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மலர்க்கொத்தை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அணுகுண்டுத் தாக்குதலையடுத்து கைக்குழந்தையான இறந்த சகோதரனின் உடலை தூக்கி வைத்திருக்கும் சிறுவன் ஒருவனை வெளிப்படுத்தும் புகைப்படத்துக்கு அண்மையில் நின்றவாறு பாப்பரசர் தனது உரையை ஆற்றினார்.
பரஸ்பர அழிவு தொடர்பான பயம் மற்றும் முழுமையாக நிர்மூலமாக்கப்படும் அச்சுறுத்தல் என்பன சமாதானத்துக்கு பொருத்தமற்றவையாக உள்ளதாக குறிப்பிட்ட அவர், அணு ஆயுத உற்பத்தியை தடுக்க வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தினார்.

அவர் ஜப்பானுக்கான இந்த விஜயத்தின்போது நாகசாகியிலுள்ள விளையாட்டு மைதானமொன்றில் இடம்பெற்ற ஆராதனை நிகழ்வில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது. இதன்போது மேற்படி பிராந்தியத்திலுள்ள மக்களின் ஆன்மாவுக்கு அணு குண்டுத் தாக்குதலால் ஏற்பட்டுள்ள காயம் குணப்படுத்துவதற்கு சிரமமானது எனப் பாப்பரசர் கூறினார். இந்நிலையில் மூன்றாம் உலகப் போரொன்று ஏற்படும் பட்சத்தில் அனைத்தும் சின்னாபின்னமாகிவிடும் என அவர் எச்சரித்தார்.
அத்துடன் ஜப்பானில் தமது மத நம் பிக்கைக்காக சித்திரவதைக்குள்ளாகி மரணத்தைத் தழுவிய சிறுபான்மை கிறிஸ்தவர்களுக்கு பாப்பரசர் அஞ்சலி செலுத்தினார்.
