(ஆர்.யசி)

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பெற்ற வெற்றியின் மூலமாக அடுத்த 20 ஆண்டுகளுக்கு ராஜபக்ஷக்களின் ஆட்சியே நிலவும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

மக்களின் முழுமையான ஆதரவும் கிடைக்கும் என்கிறது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி. உடனடியாக பாராளுமன்ற தேர்தலை நடத்த ஐக்கிய தேசிய கட்சி முழுமையாக ஒத்துழைப்பு வழங்கி  பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுத்தர வேண்டும் எனவும் கூறுகின்றனர். 

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியுடன் உடனடியாக பொதுத் தேர்தலை நடத்தி  அரசாங்கம் அமைக்கவேண்டும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ கூறியுள்ள நிலையில் அது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் உதய கம்மன்பில கூறுகையில் இதனை தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், 

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவின் அமோக வெற்றியுடன் இந்த நாட்டில் புத்துணர்வும், மாற்றம் ஒன்றும் ஏற்பட்டுள்ளது.

பெரும்பான்மை மக்களின் முழுமையான ஆதரவும், சிங்கள பெளத்த அடையாளமும் கிடைத்துள்ளது. சிறுபான்மை மக்களின் ஆதரவும் கிடைத்திருக்கும் ஆனால் ஐக்கிய தேசிய கட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் திட்டமிட்டு சிறுபான்மை மக்களின் ஆதரவு கிடைக்காத வகையில் செயற்பட்டனர்.

எனினும் நாம் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் சகல மக்களையும் அரவணைத்து செல்லவே முயற்சிக்கின்றோம்.

இப்போது எமக்கு கிடைத்து வெற்றியின் மூலமாக அடுத்த இருபது ஆண்டுகளுக்கு ராஜபக்ஷக்களின் அரசாங்கம் தொடரும்.

நாம் செய்யும் வேலைத்திட்டங்கள், அபிவிருத்தி திட்டங்கள், வாழ்வாதார நகர்வுகள் மூலமாக மக்கள் அனைவரும் எமது ஆட்சியை கொண்டு செல்லவே ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.

சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் அனைவரும் இப்போது ஒரு அணியாக ஒன்றிணைந்து ஐக்கிய பயணம் ஒன்றினை முன்னெடுக்க வேண்டும். அதற்கான அழைப்பை இப்போதும் நாம் விடுக்கின்றோம் . 

மேலும் ஜனாதிபதி தேர்தல் வெற்றியுடன் உடனடிகான பாராளுமன்ற தேர்தலை நடத்தி எமக்கான அரசாங்கம் ஒன்றினை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கமாகும். 

அதற்கான எண்ணம் எம்மிடம் உள்ளதைப்போலவே பொதுத் தேர்தலை நடத்த ஐக்கிய தேசிய கட்சியும் முழுமையான ஒத்துழைப்பை எமக்கு வழங்க வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.