(எம்.மனோசித்ரா)

நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து அனைத்து பிரஜைகளுக்கும் இன, மத பேதமற்ற கௌரவத்துடன் வாழ்வதற்கான சூழலை உறுதிப்படுத்துவதற்காகவே முப்படையினரை கடமைகளில் ஈடுபடுத்துவதற்கான விஷேட வர்த்தமானி வெளியிடப்பட்டிருப்பதாகத் தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குனரத்ன, இலங்கையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டு ஜனநாயகம் கேள்விக்குட்படுத்தப்பட மாட்டாது என்றும் உறுதியளித்தார்.

பொதுமக்களின் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ், நாட்டில் அமைதியைப் பேணுவதற்காக இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கு ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி தொடர்பில் வெளியிடப்படும் விமர்சனங்கள் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே கமல் குனரத்ன இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

நாட்டில் சாதாரணமாக சட்டத்துடன் தொடர்புடைய பிரச்சினைகள் ஏற்படும் போது பொலிஸாருக்கு அவை தொடர்பில் அறிவிக்கப்படும். நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாத்து நாட்டு மக்களுக்கு ஒழுக்கமானதும் அமைதியானதுமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பு பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இவ்வாறிருக்க ஏதேனுமொரு பிரதேசத்தில் பிரச்சினைகள் ஏற்படும் போது பொலிஸாரால் அதனைக்கட்டுப்படுத்த முடியாமல் போகும் போது, பொலிஸில் விஷேட பயிற்சி பெற்ற விஷேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள். 

எனினும் கட்டுப்படுத்த முடியாத வகையில் பாரிய சம்பவங்கள் ஏதேனும் ஏற்பட்டால் , அவ்வாறான சந்தர்ப்பங்களில் மாத்திரமே பாதுகாப்பு படையினர் நேரடியாக பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். எனவே இது தொடர்பில் கலவரமடையத் தேவையில்லை.

இதன் மூலம் இராணுவ ஆட்சியை கொண்டு செல்லும் எதிர்பார்ப்பும் இல்லை. 

நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாப்பதற்கும் , அனைத்து பிரஜைகளுக்கும் இன, மத பேதமற்ற கௌரவத்துடன் வாழக் கூட சூழலை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை நாம் முன்னெடுப்போம். 

இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் நாம் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியிருக்கின்றோம். 

இந்நிலையில் யாரேனும்,  நாட்டில் இராணுவ ஆட்சியை உருவாக்க முயற்சித்து ஜனநாயகத்தை கேள்விக்குட்படுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகக் நம்பினால், அவ்வாறு எந்த சந்தர்ப்பத்திலும் நடைபெறாது என்று பாதுகாப்பு செயலாளர் என்ற ரீதியில் நான் உறுதியளிக்கின்றேன் என அவர் தெரிவித்தார்.