யாழ்ப்பாணம்  பொம்மை வெளியில் வீதியால் சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்தனர் என்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பொம்மை வெளிப் பகுதியில் வீதியால் நடந்து சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலி நேற்று (22) காலை மோட்டார் சைக்கிள் சென்ற இனம் தெரியாத நபர்களினால் அறுத்துச் செல்லப்பட்டது.

குறித்த  சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் யாழ். பொலிஸ் நிலையத்தில் உடனடியாக முறைப்பாட்டினை செய்துள்ளார். 

இந்நிலையில் யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிஸார்  சம்பவம் நடை பெற்ற இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.

குறித்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கெமராவின் உதவியுடன் சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிள் இனம் காணப்பட்டது.

வாகன இலக்கத்தின் அடிப்படையில் தங்கச் சங்கிலி அறுப்பில் ஈடுபட்டனர் என்ற குற்றச் சாட்டில் சம்பவம் நடைபெற்று சில மணி நேரத்திலேயே இருவர் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 23,27  வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.