(எம்.மனோசித்ரா)

தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் கடந்த 16 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றதிலிருந்து ஒரு வாரத்திற்குள் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் பதிவாகிய வன்முறைகளை பட்டியல்படுத்தியுள்ளது.

அதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் 35 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ள அதே வேளை, தேசிய மக்கள் சக்தி சார்பில் எவ்வித வன்முறைகளும் பதிவாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய 17 தேர்தல் மாவட்டங்களிலும் 45 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. களுத்துறை மாவட்டத்திலேயே அதிகளவான வன்முறைகள் பதிவாகியுள்ளன. இம்மாவட்டத்தில் 9 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பதுளை மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில் 12 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

மேலும் புத்தளம், கேகாலை மற்றும் திகாமடுல்ல ஆகிய பிரதேசங்களில் தலா நான்கு வன்முறைகள் வீதம் 12 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கம்பஹா மாவட்டத்தில் 5 வன்முறைகள் பதிவாகியுள்ளன. திருகோணமலை மாவட்டத்தில் மூன்று வன்முறை சம்பவங்களும், மொனராகலை , மாத்தளை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் 6 வன்முறை சம்பவங்களும் பதிவாகியுள்ளன. 

எனினும் கொழும்பு , யாழ்ப்பாணம், மாத்தறை, நுரவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் எவ்வித வன்முறை சம்பவங்களும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் பதிவாகிய வன்முறைகளை வகைப்படுத்தி பட்டியிலிட்டுள்ளது. அதற்கமைய குறித்த 17  மாவட்டங்களிலும் 23 தாக்குதல் சம்பவங்களும், 10 அச்சுறுத்தல்களும், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் 4 சம்பவங்களும், தேர்தல் குற்றங்கள் ஐந்தும், இரு சட்ட விரோத தேர்தல் பிரசாரங்களும் ஏனைய வன்முறை சம்பவம் ஒன்றும் பதிவாகியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

பதிவாகியுள்ள 45 வன்முறை சம்பவங்களில் 35 வன்முறைகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தொடர்பிலேயே பதிவாகியிருக்கின்றது. 

புதிய ஜனநாயக முன்னணி சார்பில் 4 சம்பவங்களும், ஏனைய கட்சிகள் சார்பில் 6 சம்பவங்களும் பதிவாகியிருக்கின்றன. தேசிய மக்கள் சக்தி சார்பில் இவ்வாறான வன்முறை சம்பவங்கள் எவையும் பதிவாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.