கன்னியாகுமரி அருகே, கனவில் துரத்திய பேய்க்கு பயந்து கிணற்றில் குதித்த இளைஞரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள ஐரேணிபுரம் அயனிவிளை பகுதியில், நாகதேவி அம்மன் கோயில் உள்ளது. 

இன்று காலை, இந்த கோயிலில் வழக்கமான பூஜைகள் செய்வதற்காக பூசாரி சென்றார். அப்போது கோயில் கிணற்றில் இருந்து சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது, இளைஞர் ஒருவர் கிணற்றுக்குள் விழுந்து கிடந்தது தெரியவந்தது.

உடனே பூசாரி, இந்த தகவலை அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்து பொதுமக்களை அங்கு திரட்டினார். 

சுமார் 35 அடி ஆழம் உள்ள அந்த கிணற்றில் ஒரு அடி அளவுக்கே தண்ணீர் இருந்தது.

பொதுமக்கள் அந்த இளைஞரை மீட்க முயன்றபோது, அவர்களால் முடியவில்லை.

இதைத்தொடர்ந்து குழித்துறை தீயணைப்பு நிலையத்திற்கும், பொலிஸாருக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். அரைமணி நேரம் போராடி, கிணற்றுக்குள் தவித்துக் கொண்டிருந்த அந்த நபரை  மீட்டனர்.

அவருக்கு, உடலில் லேசான காயம் ஏற்பட்டிருந்தது. மேலும், கிணற்றில் விழுந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் இருந்ததால் அவரை குழித்துறை அரசு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பொலிஸார் அங்கு சென்று, அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவரது பெயர் ஸ்டீபன்  வயது 34 என்பதும், தொழிலாளியான அவர் அயனிவிளையைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

மேலும் அவர் பொலிஸாரிடம் அவர் கூறும்போது, "வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, 3 பேய்கள் என்னை துரத்துவதாக கனவு வந்தது. இதனால் பயந்துபோன நான் அவைகளிடம் இருந்து தப்பிக்க வீட்டில் இருந்து ஓட்டம் பிடித்தபோது, தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டேன்" என்று தெரிவித்தார்.

பேய் விரட்டியதால் கிணற்றில் விழுந்தேன் என்று அவர் கூறியதில் பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.