எந்தக் காரணத்துக்காகவும் படிப்பு தடைபடக் கூடாது  என்பதற்காக, மாற்றுத் திறனாளியான மகளை, அவருடைய தாய் 12 ஆண்டுகளாக பாடசாலைக்கு சுமந்து செல்வது மக்களின் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம், பெருங்கோழி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி பத்மாவதி. இந்த தம்பதியின் ஒரே மகள் திவ்யா.

பிறக்கும்போதே கால்கள் சூம்பிய நிலையில் காணப்பட்ட திவ்யா, வளர்ந்த பின்னர் நடக்க முடியாமல் தவழ்ந்தார். மாற்றுத்திறனாளியாக மகள் பிறந்ததால் சரவணன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால், தனி நபராக திவ்யாவை கஷ்டப்பட்டு வளர்த்தார் பத்மாவதி.

சொந்த ஊரான பெருங்கோழி அரசுப் பள்ளியில் தொடக்கக் கல்வியை முடித்தார் திவ்யா. மேல்நிலைக் கல்விக்காக உத்திரமேரூர் சென்ற அவர், அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.

எந்தக் காரணத்துக்காகவும் மகளின் கல்வி தடைபடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் பத்மாவதி, கடந்த 12 ஆண்டுகளாக மகளை இடுப்பில் சுமந்து பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார். வீட்டில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரம் மகளை இடுப்பில் சுமந்துவந்து அரசு பஸ்சில் பயணிக்கும் பத்மாவதி, மீண்டும் 1 கி.மீ. தூரம் மகளை சுமந்தவாறே பள்ளிக்குச் செல்கிறார்.

இதுகுறித்து பத்மாவதி கூறியபோது; 

“காலையில் 5 மணிக்கு எழுந்து வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, திவ்யாவை தயார் செய்து பாடசாலைக்கு அழைத்துச் செல்வேன். நாள் முழுவதும் அவளுடனேயே இருந்து தேவைகளைக் கவனித்துக் கொள்வேன். மாலையில், மீண்டும் அதுபோல் வீட்டுக்கு அழைத்துச் செல்வேன்'' என்றார்.

திவ்யா பேசும்போது, “நான் நன்றாக படித்து வேலைக்குச் செல்வேன். அதன் மூலம், என்னைப் போல் சிரமப்படுபவர்களுக்கு உதவுவேன். 

நாள் முழுவதும் என்னுடனே இருந்து கவனித்துக்கொள்வதால், அம்மாவால் வேலைக்குச் சென்று வருமானம் ஈட்ட முடியவில்லை. இதனால், வீட்டுச்சூழல் கஷ்டமாக இருக்கிறது. என் மேற்படிப்புக்கு தமிழக முதல்வர் உதவ வேண்டும்'' என்றார்.