இந்திய அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 106 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்துள்ளது.

இந்தியா-பங்களாதேஷ் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. 

பகலிரவாக நடைபெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தை தேர்வு செய்தது. 

அதன்படி களமிறங்கிய அந்த அணியில் ஆரம்பம் முதலே விக்கெட்டுகள் சரியத் தொடங்கின. இஷாந்த் ஷர்மா மற்றும் உமேஷ் யாதவ் வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாத பங்களாதேஷ் அணி 38 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

இதைத்தொடர்ந்தும் விக்கெட்டுகள் சரிய 30.3 ஓவர்களில் 106 ஓட்டங்களை மாத்திரமே பங்களாதேஷ் எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது. 

அந்த அணியில் ஒரு வீரர் கூட 30 ஓட்டங்களை எட்டவில்லை. 

இந்திய அணியில் அபாரமாக பந்துவீசிய இஷாந்த் ஷர்மா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். உமேஷ் யாதவ் 3 மற்றும் மொஹமட் ஷமி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதைத் தொடர்ந்து பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள இந்திய அணி சற்று முன்னர் வரை ஒரு விக்கெட்டினை இழந்த நிலையில் 26 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடி வருகிறது.

மயங்க் அகர்வால் 14 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, ரோகித் சர்மா 11 ஓட்டத்துடனும், புஜாரா எதுவித ஓட்டமின்றியும் துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.