எதிர்பாராமல் விபத்து ஏற்பட்டு முகத்தோற்றம் விகாரமடைபவர்களுக்கு, அவர்களின் முகப்பொலிவு மறுசீரமைப்பு என்பது துல்லியமானதாக இல்லாத நிலையே நீடித்து வருகிறது. இந்நிலையில் இதுபோன்றவர்களின் தோற்றத்தை துல்லியமான முறையில் மறுசீரமைப்பு செய்து, எலும்புகளை துல்லியமாக பொருத்துவதற்கான நவீன கருவி (Indvess Bone Stablizer) ஒன்று கண்டறியப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து இந்த கருவியை கண்டறிந்த வைத்திய நிபுணர் வெங்கடாஜலபதி தெரிவிக்கையில்,“ விபத்து அல்லது வேறு காரணங்களால் முகத்தில் உடைந்து போகும் எலும்புகளை மீண்டும் சீராக்குவது  என்பது சவாலான பணி. இத்தகைய சத்திரசிகிச்சையின் போது எலும்புகளை துல்லியமாக பொருத்துவதும் சவாலானது. அதனை முப்பரிமான முறையில் துல்லியமாக பொருத்துவதற்காக உதவும் கருவியினை கண்டறிவதற்காக ஐந்து ஆண்டுகளாக ஆய்வு செய்து வந்தேன்.

இதனடிப்படையில் Indvess Bone Stablizer என்ற கருவியை வடிவமைத்து உருவாக்கினேன். இக்கருவியின் மூலம் இதுவரை 200க்கும் மேற்பட்டவர்களுக்கு முக சீரமைப்பு சத்திரசிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், அவர்கள் தங்களது துல்லியமான முகப்பொலிவு மீண்டும் இயல்பான நிலையில் மீட்டெடுக்கப்பட்டிருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தற்போது இந்த கருவியை உடலில் ஏனைய பகுதிகளில் சேதமடையும் எலும்புகளுக்கும் பொருத்தும் சத்திர சிகிச்சையில் பயன்படுத்துவது குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது. ’என்றார். இதன் மூலம் முகத்தில் எலும்புகள் சேதமடைந்தால், அதனை மீண்டும் துல்லியமாக பொருத்துவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது உறுதியாகிறது.