அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோஹந்த் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வரும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனரும், நடிகருமான மோகன் ராஜா தெரிவாகியிருக்கிறார்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த ஆண்டில் பேட்ட, சூப்பர் டீலக்ஸ், சிந்துபாத், சங்கத்தமிழன் ஆகிய படங்களில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார்.  அத்துடன் அவர் இந்த ஆண்டு ‘மார்க்கோனி மாத்தாய்’ என்ற படத்தின் மூலம் மலையாளத்திலும், ‘சைரா நரசிம்ம ரெட்டி’ என்ற படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகியிருக்கிறார்.

சுந்தர் சி இயக்கத்தில், விஷால் நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஆக்சன்’ படத்திலும் கௌரவ வேடத்தில் தோன்றி இருக்கிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இந்நிலையில் இவர் தற்போது அறிமுக இயக்குனர் வெங்கடகிருஷ்ண ரோஹந்த் இயக்கத்தில் நடித்துவரும்,‘ யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க இயக்குனரும், நடிகருமான மோகன்ராஜா ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இவர் ஏற்கெனவே அறிமுக இயக்குனர் குரு ரமேஷ் இயக்கத்தில் தயாரான ‘என்ன சத்தம் இந்த நேரம்’ என்ற படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானவர். தற்போது விஜய்சேதுபதி கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் நடிக்கும் படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் இயக்குனர் மோகன் ராஜா.

இதனிடையே மோகன் ராஜா இயக்கிய எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, என்ற படத்தில் துணை நடிகராக விஜயசேதுபதி நடித்திருந்தார் என்பதும், அதனை மோகன் ராஜா இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோகன் ராஜா குறித்து இயக்குனர் வெங்கடகிருஷ்ணன் ரோஹந்த்  தெரிவிக்கையில்,

“ நான் இயக்குனர் ஜனநாதனின் உதவியாளராக ‘பேராண்மை’ என்ற படத்தில் பணியாற்றியபோது, எமக்கும் இயக்குனர் மோகன் ராஜாவுக்கு இடையே நட்பு ஏற்பட்டது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற திரைப்படத்தில் இசை மையப்படுத்தப்பட்டிருப்பதால் பிரபலமான ஒரு நட்சத்திரம் தேவை என்றும், அவர் திரையில் புதிதாக இருக்க வேண்டும் என்றும் திரைக்கதை கேட்டதால், அதற்கு மோகன்ராஜா பொருத்தமாக இருப்பார் என்று கருதியதால், அவரை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறோம்.” என்றார்.