ராஜஸ்தானில் நீதிபதி பதவிக்குப் பரீட்சை எழுதிய முதல் முயற்சியிலேயே 21 வயது இளைஞர் தெரிவாகி இருப்பது அவரது குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ராஜஸ்தானில் நீதித்துறை பணிகளுக்கான பரிச்சை எழுத வயது வரம்பு 23 ஆக இருந்தது.

கடந்த ஆண்டு 21 வயது பூர்த்தியானவர்களும் நீதிபதிகளுக்கான நீதித்துறை பரீட்சை எழுதலாம் என்று ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில், ராஜஸ்தானில் நிறைய இளைஞர்கள் நீதிபதிகளுக்கான பரீட்சை எழுதினார்கள். அவர்களில் மிக இளம் வயதுடையவரான ஜெய்ப்பூரைச் சேர்ந்த மயங்க்பிரதாப் சிங் என்பவர் குறித்த பரீட்சையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ராஜஸ்தானில் உள்ள சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டத்தரணி படித்த பிரதாப்சிங்கின் படிப்பு இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் மாதம்தான் நிறைவு பெற்றது.

இந்த நிலையில் பிரதாப் சிங் நீதித்துறையின் பரீட்சை எழுதி நீதிபதியாகி சாதனை படைத்துள்ளார். 

குறித்த இளைஞருக்கு நீதிபதி பதவிக்கான அரசாணை வழங்கப்படும் என்று தெரிகிறது. இதன் மூலம் இந்தியாவின் இளம் நீதிபதி என்ற சாதனை பிரதாப்சிங் படைக்கவுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், 

“நீதித்துறை பரீட்சைக்கு வயது குறைக்கப்பட்டதால் தான் என்னால் இந்த பரீட்சை எழுத முடிந்தது. நான் தெரிவாகி இருப்பதன் மூலம் அதிக மக்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அவர்களுக்காகச் சிறந்த முறையில் பணியாற்றுவேன்” என்றார்.