இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. 

இதில் இந்தூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 130 வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா - பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 2 ஆவதும் மற்றும் இறுதியுமான டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று ஆரம்மாகிறது.

இது பகல்-இரவாக நடத்தப்படும் போட்டி என்பது கூடுதல் விசேடமாகும். இதனால் இந்த டெஸ்ட் இப்போது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

டெஸ்ட் அரங்கில் ‘நம்பர் ஒன்’ அணியாக வலம் வரும் இந்தியா முதல்முறையாக பகல்-இரவு டெஸ்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆரம்பத்தில் பகல்-இரவு டெஸ்டில் விளையாட தயக்கம் காட்டிய இந்திய அணி, சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் நிறுவன தலைவர் ஆனதும், இணக்கம் தெரிவித்து விட்டது.

பகல்-இரவு டெஸ்டுக்கு மினுமினுப்பான இளஞ்சிவப்பு நிற பந்து (பிங்க் பால்) பயன்படுத்தப்படுகிறது. இது தான் பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்கக்கூடியதாகும். பிங்க் பந்து அதிகமாக ‘ஸ்விங்’ ஆகும். அத்துடன் மாலைவேளையில் பந்து கண்ணுக்கு தெளிவாக தெரிவதில் சிக்கல் உள்ளது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி (தலைவர்), ரஹானே, ரவீந்திர ஜடேஜா, விருத்திமான் சஹா, அஸ்வின், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், மொஹமட் ஷமி.

பங்களாதேஷ்: ஷத்மன் இஸ்லாம், இம்ருல் கேயஸ், மொமினுல் ஹக் (தலைவர்), முஷ்பிகுர் ரஹிம், மாமதுல்லா, மொஹமட் மிதுன், லிட்டான் தாஸ், மெஹிதி ஹசன், தைஜூல் இஸ்லாம் அல்லது முஸ்தாபிஜூர் ரகுமான், அபு ஜெயத், அல்-அமின் ஹூசைன் அல்லது எபாதத் ஹூசைன்.