பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வோர்னர் அபார சதம் அடித்தார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி  அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இருபதுக்கு - 20 மற்றும் டெஸட் போட்டிகளில் விளையாடி வருகிறது

இருபதுக்கு - 20 தொடரை 2:0 என்ற கணக்கில‍ை இழந்துள்ள பாகிஸ்தான் அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறது.

இந் நிலையில் நேற்றைய தினம் ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தேர்வு செய்தது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 240 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அதிகப்பட்சமாக ஆசாத் ஷபிக் 76 ஓட்டங்களை எடுத்தார்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. அவுஸ்திரேலிய அணியில் டேவிட் வோர்னரும் ஜோ பர்ன்ஸும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கி நல்ல ஆரம்பத்தை அணிக்காக பெற்றுக் கொடுத்தனர்.

அபாரமாக ஆடிய டேவிட் வோர்னர் சதம் அடித்தார். இது அவருக்கு 22 வது டெஸ்ட் சதம் ஆகும். சற்று முன்னர் வரை அவுஸ்திரேலிய அணி 78 ஓவர்களை எதிர்கொண்டு ஒரு விக்கெட்டினை இழந்த நிலையில் 285 ஓட்டங்களை குவித்துள்ளது.

ஜோ பர்ன்ஸ் 97 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, டேவிட் வோர்னர் 142 ஓட்டத்துடனும் லபுஸ்சான்ஜின் 37 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.