(நா.தனுஜா)

உயிர்த்த ஞாயி­று­தின பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்கள் தொடர்­பிலும் மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்­பிலும் எவ்­வித பக்­கச்­சார்­பு­மற்ற விசா­ர­ணை­களை ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ முன்­னெ­டுக்­கலாம். எனினும் அவர் ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்று மூன்று நாட்­க­ளுக்­குள்­ளாக    நூத­ன­சாலை மோசடி வழக்­கி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்­டது போன்று அல்­லாமல், நியா­ய­மாக விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் துஷார இந்­துனில் வலி­யு­றுத்­தினார்.

கொழும்பில் வொக் ஷோல் வீதியில் அமைந்­துள்ள ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிர­சாரக் காரி­யா­ல­யத்தில் நேற்று வியா­ழக்­கிழமை ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த ஊட­க­வி­யலாளர் சந்­திப்­பி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். அங்கு அவர் மேலும் கூறி­ய­தா­வது:

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் சஜித் பிரே­ம­தாச கட்சி ஆத­ர­வா­ளர்­க­ளையும் பொது­மக்­க­ளையும் சந்­திப்­ப­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும் காலை­யி­லேயே சிறி­கொத்­தாவின் வாயில் கத­வுகள் பூட்­டப்­பட்­டி­ருந்­தன. என­வேதான் வொக் ஷோல் வீதியில் அமைந்­துள்ள தேர்தல் பிர­சார அலு­வ­லத்தில் மக்கள், சஜித் பிரே­ம­தா­சவை சந்­திப்­ப­தற்­கான வாய்ப்பு ஏற்­ப­டுத்­திக்­கொ­டுக்­கப்­பட்­டது. கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தா­விற்கு செல்­லும்­வரை எதிர்­வரும் வாரங்­க­ளிலும் இரண்டு அல்­லது மூன்று நாட்கள் சஜித் பிரே­ம­தாச வொக் ஷோல் வீதிஅலு­வ­ல­கத்தில் இருப்பார். இந்­நி­லையில் நாம் மிகுந்த நெருக்­க­டிக்கு முகங்­கொ­டுத்­தி­ருக்­கின்றோம். ஏனெனில் நடை­பெற்று முடிந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் சஜித் பிரே­ம­தா­ச­விற்கு வாக்­க­ளித்த மக்கள் அனை­வரும் அவரின் தலை­மைத்­துவம் இன்றி, பாரா­ளு­மன்றத் தேர்­தலில் வாக்­குக்­கோரி எம்­மிடம் வர­வேண்டாம் என்று கூறு­கின்­றார்கள். எனவே எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் நாம் போட்­டி­யி­டு­வதா, இல்லையா? என்ற குழப்பம் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. அவ்­வாறு போட்­டி­யி­டு­வ­தாயின் சஜித் பிரே­ம­தா­சவின் தலை­மைத்­து­வத்­தி­லேயே போட்­டி­யிட முடியும். அதற்­கான வாய்ப்பு வழங்­கப்­ப­டா­விட்டால் அர­சி­யலிலிருந்து ஓய்­வு­பெ­று­வதே எமது தெரி­வாக உள்­ளது. அண்­மையில் எமது கட்­சியைச் சேர்ந்த பலர் தமது அமைச்சுப் பத­வி­க­ளி­லி­ருந்து இரா­ஜி­னாமா செய்­தார்கள். எனக்கு அமைச்சுப் பதவி வழங்­கப்­ப­ட­வில்லை. எனவே மக்கள் வழங்­கிய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் என்ற ஆணை மாத்­தி­ரமே என்­னி­ட­முள்­ளது. அந்த மக்கள் ஆணை­யி­லி­ருந்து இரா­ஜி­னாமா செய்­வ­தற்கு நான் தயா­ராக இல்லை. எனவே ஜனா­தி­பதித் தேர்­தலில் சஜித் பிரே­ம­தா­ச­விற்கு ஆத­ர­வா­கவும் கடந்த தேர்­தலில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் என்ற விதத்தில் எனக்கு ஆத­ர­வா­கவும் வாக்­க­ளித்த மக்­களின் பக்­கமே நாம் நிற்போம். அந்தத் தீர்­மா­னத்­துடன் தேர்­தலில் போட்­டி­யி­டுவோம். அவ்­வா­றின்றேல் மான­முள்­ள­வர்­க­ளாக அர­சி­யலிலிருந்து வில­குவோம். அதே­போன்று உயிர்த்த ஞாயி­று­தின பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்கள் தொடர்­பிலும் மத்­திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பிலும் எவ்வித பக்கச்சார்புமற்ற சுயாதீன விசாரணைகளை புதிய ஜனாதிபதி முன்னெடுக்கலாம். கோத்தபாய ராஜபக் ஷ ஜனாதிபதியாக பதவியேற்று மூன்று நாட்களுக்குள்ளாக அவர் தொடர்பில் காணப்பட்ட நூதனசாலை மோசடி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். அவ்வாறில்லாமல்,நியாயமான முறையில் மேற்படி விசாரணைகளை மேற்கொள்ளலாம்.