பிரேஸிலில் பெண் ஒருவர் 6 ஆயிரம் கண்ணாடி போத்தல்களைக் கொண்டு வீட்டைக் கட்டி முடித்துள்ளார்.

பிரேஸிலின் சா பாலோ மாகாணம், இடாவ்காவ் நகரைச் சேர்ந்த  இவோன் மார்டின் என்ற பெண்ணே இவ்வாறு வீடு கட்டியுள்ளார். 

குறித்த பெண்  தனது கணவரிடம் இருந்து பிரிந்து, கைக்குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வந்த நிலையில், அண்மையில் அவரது குழந்தை உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளது. 

 இதனால் இவோன் மார்டின் கடும் மனஉளைச்சலுக்கும், விரக்திக்கும் உள்ளானார். இதிலிருந்து விடுபட அவர் வழியைத் தேடினார். அப்போதுதான் சுற்றுப்புறத்தில் ஏராளமான கண்ணாடி போத்தல்கள் குவிந்து கிடப்பதைக் கண்டார். அவற்றைப் பயன்படுத்தி வீடு ஒன்றைக் கட்ட முடிவு செய்தார்.

போத்தல்களைக்  கொண்டு கட்டப்பட்ட படுக்கையறை அதன்படி 6 ஆயிரம் கண்ணாடி போத்தல்களைக் கொண்டு 3 மீற்றர் உயரம், 9 மீற்றர் அகலம் மற்றும் 8 மீற்றர் நீளம் கொண்ட அழகான வீட்டைக் கட்டி முடித்தார்.

வீட்டிலுள்ள படுக்கையறை, சமையலறை, கழிவறை என அனைத்துமே கண்ணாடி போத்தல்களால் கட்டப்பட்டுள்ளன. குறித்த போத்தல் வீடு கட்டுமான செலவுகளைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் உதவும் என இவோன் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.