(எம்.மனோசித்ரா)

புதிய ஜனநாயக முன்னணி சார்பில் தேர்தலில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச தனக்கு ஆதரவளித்த பொது மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டதாலேயே இன்று ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தா மூடப்பட்டிருந்தது. 

பொதுமக்களை உள் நுழையவிடாமல் செய்வதற்காக தலைமையகம் மூடப்பட்டதாக வெளியாகிய செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் தெளிவுபடுத்தி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் உள் நுழைவதற்கு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்று எனது கவனத்துக் கொண்டுவரப்பட்டது. 

புதன்கிழமை நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வை ஒத்தி வைப்பதற்கு இணக்கம் காணப்பட்டது. 

அதற்கமைய நிகழ்வை ஒத்தி வைப்பதாக எடுக்கப்பட்ட தீர்மானம் அனைவரும் அறிவிக்கப்பட்டது. 

அன்றிறவு சஜித் பிரேமதாச என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பொதுமக்கள் சந்திப்பு பிற்போடப்பட்டமை பெரும்பாலானோருக்கு அறிவிக்கப்படாமையால் கொழும்பு வரும் ஆதரவாளர்களை அங்குள்ள தேர்தல் அலுவலகத்தில் சந்திப்பதாக தெரிவித்தார். 

இதற்கு நாம் மறுப்பேதும் தெரிவிக்கவில்லை. இன்றைய மக்கள் சந்திப்பு இடம்மாற்றப்பட்டமை அனைவரதும் இணக்கப்பாட்டுனேயாகும் என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.