இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவித்து கைப்பற்றப்பட்டிருந்த இந்திய இழுவைப்படகு ஒன்று மன்னார் நீதி மன்றில் இடம்பெற்ற வழக்கில் குறித்த  இந்திய படகு  விடுவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 28.07.2019 அன்று இந்திய இழுவைப்படகு ஒன்றில் மீன் பிடியில் ஈடுபட்டதாக கூறப்படும் 7 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டதாக தெரிவித்து இலங்கை கடற்படையினர் குறித்த மீனவர்களை கைது செய்துள்ளதுடன் மீன்பிடியில் ஈடுப்பட்ட இலுவைப்படகையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யபட்டிருந்த இந்திய மீனவர்கள் 7 பேரையும் கடற்படையினர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.

தலை மன்னார் பொலிஸார் குறித்த இந்திய மீனவர்களை மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தினர்.

இவர்களை மன்னார் நீதவான் நீதிமன்றின் கட்டளைக்கு அமைவாக 14 நாட்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு 08.08.2019 அன்று மன்னார் நீதவான் நீதி மன்றில் நடைபெற்ற இவர்களுக்கான வழக்கு விசாரணையில் மீனவர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா இவர்களுக்கு தண்டப்பணம் செலுத்த கட்டளை பிறப்பித்ததுடன் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும் விதித்து இவர்களை விடுவித்தார்.

அத்துடன் விடுதலை செய்யப்பட்ட குறித்த 7 இந்திய மீனவர்களையும் மீரியான முகாம் ஊடாக இவர்களை தங்கள் தாய் நாட்டுக்கு அனுப்பிவைக்கும் படியும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

மேலும் கைப்பற்றப்பட்டு கடற்படையினரின் பாதுகாப்பில் இருந்து வந்த இயந்திர இலுவைப் படகு சம்பந்தமாக இவ் படகின் உரிமையாளரை விசாரனைக்காக யாழ் இந்திய தூதரக அதிகாரியின் ஊடாக நீதவான் கட்டளைப் பிறப்பித்திருந்தார்.

இவ் கட்டளையைத் தொடர்ந்து 17.10.2019 அன்று குறிப்பிடப்பட்ட இழுவைப்படகு உரிமையாளர் மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலையானார்.

இதைத் தொடர்ந்து இடம்பெற்ற இவ் வழக்கு விசாரனை துரிதமாக இடம் பெற்று நேற்றைய தினம் புதன் கிழமை (20.11.2019) இலுவைப்படகு சம்பந்தமான வழக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.

இத் தீர்ப்பில் படகு விடுவிக்கப்பட்டு  உரிமையாளருக்கு படகை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இவ் வழக்கில் பிரதிவாதிக்காக மன்றில் மன்னார் சிரேஸ்ட சட்டத்தரனி பா.டெனிஸ்வரன் மற்றும் செ.டினேசன் ஆகியோர் மன்றில் முன்னிலையாகி தங்கள் வாதங்களை முன்னிலைப் படுத்தியிருந்தனர்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய படகுகள் அரச உடமையாக்கப்படும் என்ற அரசின் அறிவித்தலுக்குப் பின் முதல் முறையாக நீதிமன்றில் விடுவிக்கப்பட்ட படகு இதுவே எனவும் தெரிவிக்கப்படுகின்றது