நீங்கள் ஜனாதிபதி ஆகியது தமிழ் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களின் யுத்த கால வன்சக்தி செயற்பாடே காரணம் .அதனால் தான் கூட்டு எதிர்ப்பாக நீங்கள் ஜனாதிபதி ஆகிவிடக் கூடாது என்று  வடகிழக்கு மக்கள் மென்சக்தியுடைய ஒருவருக்கு வாக்களித்தார்கள் என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின்  தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

இவ்விடையம் தொடர்பாக அவர் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,,

யுத்தம் முடிவுற்று 10 ஆண்டுகள் ஆகியும் நல்லிணக்கம் என்பது வெறும் உதட்டளவில் தான் உள்ளது. கடந்த நான்கு ஜனாதிபதி தேர்தல்களிலும் (2005,2010,2015,2019) ராஜபக்சகளினால் தமிழ் மக்களின் மனதை வெற்றி கொள்ள முடியவில்லை என்றால் ராஜபக்சக்கள் தான் சித்தாந்தத்தை மாற்ற வேண்டும்.  தமிழ் மக்கள் அல்ல தமிழ் மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளதால் தான் தன்னெழுச்சியாக வாக்களித்தார்கள். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரித்ததால் தான் வாக்களித்தார்கள் என்றில்லை.

நீங்கள் உண்மையான பொறுப்புக்கூறலை ஏற்படுத்துங்கள். முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்கு வெளிப்படையாக நடந்தவற்றைக் கூறி பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மனதை வென்றெடுங்கள். நீர்த்துப்போன ஜனநாயகத்தில் வேர்த்துப்போன வாதங்களால் தான் முரன் நகை நீள்கிறது. 

அது கசப்புணர்வாக மாறி  இனங்களுக்கிடையே பசப்பு கொள்கிறது தமிழர்கள் நல்லிணக்கத்தையே விரும்புகிறார்கள் 'விட்டுவிடு விட்டுக் கொடுங்கள்'; என்றார் புத்த பெருமான் ஆகவே தமிழ் மக்களின் அடிப்படை வாழ்வுரிமை இருப்பில் பங்கம் ஏற்படுவதால் தான் தர்க்க நிலை ஏற்படுகின்றது. 

சிங்களவர்களை நாங்கள் எதிர்க்கவில்லை அவர்கள் எமக்கு எதிரிகளும் இல்லை அரசியல்வாதிகளின்  தவறான சித்தாந்தத்தையே நாம் எதிர்க்கின்றோம்.

உலகலாவிய சனநாயக அரசியல் பெரு வளர்ச்சி பெற்று விட்டது.

 பல வருடங்களாக யுத்தம் நடந்த நாடுகளில் கூட நல்லிணக்கம் கூட்டு ஐக்கியம் பெற்றுவிட்டது.இலங்கையில் துளியளவும் பாதிக்கப்பட்ட தரப்பின் மனங்கள் வெல்லப்படவில்லை என்பது வேதனைக்குரிய விடயம்.ஆகவே தென்னாபிரிக்காவில்  உண்மை நல்லிணக்கம் ஆணைக்குழு முன் ஒரு கவிஞர் கூறிய வாசகத்தை நினைவு படுத்த விரும்புகின்றேன். 'உண்மை இறந்து விடுவதில்லை அது நமக்குள்ளேயும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. 

அதை நேரடியாகச் சந்தித்து சமரசம் செய்து கொள்வதே நல்லது' என்றார். ஆகவே பாதிக்கப்பட்ட தரப்புடன் மனம் திறந்து பேசுங்கள் மாற்றம் ஏற்படும் கடந்த மைத்திரி,ரணில் அரசாங்கம் மென் போக்கில் காலத்தை கடத்தியதே தவிர  நின்று நிலைக்கக் கூடிய ஆக்கபூர்வமான எந்த விடயத்தையும் முன்னெடுக்கவில்லை அதற்கு தமிழ் தரப்பும் உடந்தையாக இருந்தது வேதனையே!

எனவே வாக்களிக்காதவருக்கும் வாய்ப்பளித்து வெற்றி கொள்வதே சனநாயக மரபியல் தத்துவமாகும் எனவே காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகள், காணிவிடுவிப்பு புதிய அரசியலமைப்பு உருவாக்கம் போன்ற விடயங்களில் இதய சுத்தியாக ஈடுபட்டு தமிழ் சிங்கள முரன்பாட்டுக்கு நிரந்தர தீர்வு கானுவீர்கள் என்று  எதிர் பார்க்கின்றோம்.

ஏன் என்றால் நீங்கள் தி;டமாக முடிவெடுக்கக் கூடியவர் என்பதால் இந்த கோரிக்கைகளை முன் வைப்பதுடன் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தையும் சனநாயக சூழலையும் ஏற்படுத்துவதுடன் ஊழலையும், போதைப்பொருள் கடத்தலையும் கட்டுப்படுத்துவீர்கள் என்று நம்புகிறோம்.பதவி ஏற்பில் நீங்கள் பௌத்தர்களால் மட்டுமே சனாதிபதியாக  தெரிவு செய்யப்பட்டதாக கூறியது முற்றிலும் தவறானது.தமிழ் பேசும் மக்களின் வாக்கே முதன்மையாகியுள்ளது என்பதை மறந்து விட்டிர்கள்.

 வடகிழக்கு , கொழும்பு , மலையகம் என குறைந்தது நான்கு இலட்சம் வாக்குகள் தமிழ் பேசும் மக்கள் வாக்களித்துள்ளனர். இந்த வாக்குகள் இல்லா விட்டால் நீங்கள் 50 வீதமும் கடந்திருக்க முடியாது. இரண்டாவது சுற்று வாக்கு எண்ணியிருக்க வேண்டும்.

 ஆகவே நீங்கள் இந்த நாட்டின் சனாதிபதியாக சமத்துவமாக நடந்து கொள்ள வேண்டும். பௌத்தர்களுக்கு மட்டும் சனாதிபதியாக இருக்க முனைந்தால் நல்லிணக்கத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்.

 காலத்திற்கு காலம் பதவிக்கு வருபவர்கள் இதையே பின் பற்றுகிறார்கள்.எனவே கடந்த காலத்தில் இருந்த ராஜபக்சவின் ஆட்சியைப் போல் இருக்காது என எதிர் பார்க்கின்றோம். நம்பிக்கையும் விசுவாசத்தையும் ஏற்படுத்தி நல்லிணக்கத்திற்கு வழி வகுக்க வேண்டியது உங்கள் தார்மீக கடமையும் பெறுப்பும் ஆகும் என வேண்டுகை விடுக்கின்றோம்.

'ஒரே மரத்தடியில் மூன்று நாட்களுக்கு மேல் படுத்துறங்காதீர்கள் துறவீகளே' என்றார் புத்தர் இந்த சித்தாந்;தத்தை  நடை முறைப்படுத்துங்கள். நாட்டில் புதிய வழி பிறக்கும் வாழ்வுரிமைக்காகவே தமிழ் மக்கள் போராடுகிறார்கள்.

 வன்முறையாளர்கள் அல்ல  சனநாயக விரும்பிகள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு ஆகும்.என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.